Last Updated:
பாகிஸ்தான் ராணுவம் தாக்கக்கூடும் என கருதப்படும் கிராமங்களில் மின்சார தடை விதிக்கப்பட்டுள்ளது.
எல்லையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ராணுவத்தினர் இடையே சண்டை நடந்து வரும் நிலையில், ஜம்மு காஷ்மீர் மற்றும் பஞ்சாப் மாநிலத்திற்கு செல்லும் பேருந்துகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதுபோன்று எல்லை பகுதிகளில் ரயில் சேவையும் துண்டிக்கப்பட்டுள்ளது.
பஹல்காம் தீவிரவாத தாக்குதல் சம்பவத்துக்கு பதிலடியாக இந்திய ராணுவம் கடந்த 7-ஆம் தேதி அதிகாலையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் அதிரடி தாக்குதலை நடத்தியது. 9 தீவிரவாத முகாம்கள் மீது இந்தியா நடத்திய இந்த தாக்குதலில் ஏராளமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். அதன் பின்னரும் இந்திய ராணுவம் அதிரடி தாக்குதலை பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு எதிராக நடத்தி முடித்துள்ளது.
பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலின்போது இந்தியாவின் எஸ் 400 என்ற பாதுகாப்பு அமைப்பு திறமையாக செயல்பட்டு பாகிஸ்தான் ஏவிய ஏவுகணைகளை தடுத்துள்ளது. இதேபோன்று எல்லையோர கிராம மக்களை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால் பதற்றம் நீடிக்கிறது.
இந்த நிலையில் அரியானா மாநிலத்தில் இருந்து ஜம்மு காஷ்மீர், பஞ்சாப் மாநிலத்தின் பதான்கோட் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. குடிமக்களின் பாதுகாப்பை கவனத்தில் கொண்டு இந்த நடவடிக்கையை அரசு செய்திருக்கிறது. நிலைமை இயல்பு நிலைக்கு திரும்பும் போது மீண்டும் இந்த பகுதிகளுக்கு பேருந்து இயக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதே போன்று எல்லையை ஒட்டியுள்ள மாநிலங்களில் ரயில் சேவையும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாவட்ட எல்லை பகுதிகளில் ரயில்கள் இயக்கப்படவில்லை. மறு உத்தரவு வரும் வரை இன்றைய நிலை நீடிக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் பள்ளிகள், கல்லூரி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. பாகிஸ்தான் ராணுவம் தாக்கக்கூடும் என கருதப்படும் கிராமங்களில் மின்சார தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. இதேபோன்று ஐபிஎல் கிரிக்கெட் தொடரையும் பி சி சி ஐ ஒரு வாரத்திற்கு ஒத்தி வைத்துள்ளது.
Operation Sindoor : ஜம்மு காஷ்மீர், பஞ்சாப் செல்லும் பேருந்துகள் நிறுத்தம்.. எல்லை பகுதிகளில் ரயில் சேவையும் ரத்து

