அணிவகுப்பை தலைமையேற்று நடத்திய அனுபவம் குறித்து பகிர்ந்த ஆயுதப்படை ஆய்வாளர் சரண்யா, “நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த நான் 15 ஆண்டுகளாக காவல்துறை சேவையில் இருக்கிறேன். முதல் தலைமுறையாக கல்வியில் உயர்ந்து கல்லூரி சென்றேன். கபடியில் ஏற்பட்ட அதீத ஆர்வம் காரணமாக சிறந்த கபடி வீராங்கனைகளில் ஒருவராக மாற்றியது. அப்பாவின் கனவான காவலர் பணியில் சேர்ந்தேன்.
படிப்படியாக பதவி உயர்வு பெற்று தற்போது ஆயுதப்படை ஆய்வாளராக இருக்கிறேன். 76 – வது குடியரசு தின விழா அணிவகுப்பை தலைமையேற்று நடத்தும் அரிய வாய்ப்பு கிடைத்தது.

கடந்த சில நாள்களாக அனைவரும் தீவிர ஒத்திகை பயிற்சியில் ஈடுபட்டு வந்தோம். அனைவரின் கூட்டு முயற்சி மற்றும் ஒத்துழைப்பால் மிகவும் நேர்த்தியான, கம்பீரமான அணிவகுப்பு மரியாதையாக இருந்தது. வாளேந்தி முன் வரிசையில் நின்று அணிவகுப்பை நடத்திய தருணம் மிகவும் பெருமையாகவும் கம்பீரமாகவும் உணர்ந்தேன். பெண்கள் பலரும் இதுபோன்ற பணிகளுக்கு வர வேண்டும்” என்றார்.
நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் பல ஆண்டுகளுக்கு பின் பெண் அதிகாரி ஒருவர் அணிவகுப்பை தலைமையேற்று நடத்தியது குறிப்பிடத்தக்கது.
