இருப்பினும், தான் தாமாக முன்வந்து மன்னிப்பு கேட்டதாக சீனிவாசன் விளக்கமளித்தார். மறுபக்கம், அந்த வீடியோவை பகிர்ந்த தமிழ்நாடு பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, பா.ஜ.க செயல்பாட்டாளர்களின் செயல்களுக்காக மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்பதாக தெரிவித்தார். இந்நிலையில், அன்னப்பூர்ணா சீனிவாசனின் கேள்வியில் உண்மை இருப்பதாகவும், அதிகாரம் அதைப் பணியவைப்பதாகவும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்திருக்கிறார்.
செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்த சீமான், “அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளரின் கேள்வியிலிருந்த உண்மை அனைவருக்கும் தெரியும். ஜி.எஸ்.டி வரியால் வர்த்தகர்களும், மக்களும் பாதிக்கப்படுகின்றனர். அனைத்திலும் வரி. ஒருவன் வீடு கட்ட போனாலும், அவரால் வரிதான் கட்ட முடியும். வாழவே முடியாத சூழ்நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். அவரின் கேள்வி நியாயமானது என்று இப்போது நாடெங்கிலும் பரவிடுச்சு. அதை அதிகாரம் பணியவைக்கிறது. அவர் எவ்வளவு வருத்தம் தெரிவித்தாலும், அவர் கேட்ட கேள்வியில் இருக்கும் உண்மையை யாராலும் மறைக்க முடியாது” என்று கூறினார்.
