ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் யாரும் வீட்டு காவலில் வைக்கப்படவில்லை எனஅம்மாநில கவர்னர் மனோஜ் சின்ஹா கூறினார்.
ஜம்மு – காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த அரசியல் சட்டத்தின், 370வது பிரிவை ரத்து செய்து, மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பளித்தது. அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்காக, ஜம்மு – காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய இரு யூனியன் பிரதேசங்களிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதற்கிடையே அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாமல் இருக்க அந்த மாநில முக்கிய தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா மற்றும் மெகபூபா முக்தி ஆகியோர் பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் பரவியது.
கவர்னர் பேட்டி
இது குறித்து ஜம்மு – காஷ்மீர் கவர்னர் மனோஜ் சின்ஹா கூறியிருப்பதாவது: இது முற்றிலும் ஆதாரமற்றது. ஜம்மு காஷ்மீரில் அரசியல் காரணங்களுக்காக யாரும் வீட்டுக் காவலில் வைக்கப்படவில்லை. யாரும் கைது செய்யப்படவில்லை. வதந்திகளை பரப்ப முயற்சி செய்கின்றனர் என்றார்.

