Last Updated:
“பாகிஸ்தான் ஏதாவது செய்தால், அதற்கான பதில் மிகவும் வலுவாக இருக்கும்” என பிரதமர் மோடி கூறியுள்ளதாக தகவல்
இந்தியா – பாகிஸ்தான் இடையே நடந்துவந்த கடுமையான மோதல், அமெரிக்காவின் மத்தியஸ்தத்தால், சண்டை நிறுத்தம் அமலுக்கு வந்தது. இது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இருநாடுகளும் சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை செய்ததாக முதலில் அறிவித்தார். அதன் பிறகே இந்தியா மற்றும் பாகிஸ்தான் தரப்பில் இருந்து சண்டை நிறுத்தம் தொடர்பாக அறிவிக்கப்பட்டது. இதனால், இருநாட்டு எல்லை பகுதிகளிலும் அமைதி திரும்பி வருகிறது. இரவில் சில அத்துமீறல்கள் இருந்தாலும் பெரிதாக சண்டை நடக்கவில்லை. இதனால் 3 நாள் சண்டை முடிவுக்கு வந்தது.
இந்நிலையில், இந்தியா – பாகிஸ்தான் மோதல் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் தனது வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். அதில், “இந்தியா மற்றும் பாகிஸ்தானின் வலிமையான மற்றும் அசைக்க முடியாத சக்திவாய்ந்த தலைமைத்துவத்தை எண்ணி பெருமைப்படுவதாக” டிரம்ப் தெரிவித்துள்ளார். மேலும், “பலரின் மரணத்திற்கும் அழிவுக்கும் வழிவகுக்கும் தற்போதைய சண்டையை நிறுத்த வேண்டிய நேரம் இது என்பதை புரிந்துகொண்டுள்ளனர்” என்றும் டிரம்ப் கூறியிருக்கிறார். “சண்டையில் மில்லியன் கணக்கான அப்பாவி மக்கள் இறந்திருக்கலாம், ஆனால் அவர்களின் துணிச்சலான செயலால் அது தடுக்கப்பட்டுள்ளது” என்றும் டிரம்ப் தனது பதிவில் கூறினார்.
அதேநேரம், “இந்த வரலாற்று முடிவை எட்ட அமெரிக்கா உங்களுக்கு உதவ முடிந்தது என்பதில் நான் பெருமைப்படுகிறேன்” என்றும், “இந்த இரண்டு பெரிய நாடுகளுடனும் நான் வர்த்தகத்தை கணிசமாக அதிகரிக்கப் போகிறேன்” என்றும் டிரம்ப் அறிவித்துள்ளார். மேலும், “ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு காஷ்மீர் தொடர்பாக ஒரு தீர்வை எட்ட இருநாடுகளுடனும் இணைந்து பணியாற்றுவேன்” என்றும் கூறியுள்ள டிரம்ப், “இந்தியா மற்றும் பாகிஸ்தானின் தலைமை சிறப்பாகச் செயல்பட கடவுள் ஆசீர்வதிப்பார்” என்றும் தெரிவித்திருக்கிறார்.
இந்நிலையில், ஏஎன்ஐ இரு முக்கிய தகவல்களை தெரிவித்துள்ளது. அதன்படி முதலாவதாக, பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க துணைத் தலைவர் ஜே.டி. வான்ஸிடம் பேசியதாகவும், அதில், “பாகிஸ்தான் ஏதாவது செய்தால், அதற்கான பதில் மிகவும் வலுவாக இருக்கும். அதே இரவில் (பாகிஸ்தான் பயங்கரவாதி முகாம்கள் அழிப்பு நடவடிக்கை), பாகிஸ்தான், இந்தியாவின் 26 இடங்களைத் தாக்கியது. அதற்கு இந்தியா மிகவும் கடுமையாக பதிலளித்தது” என கூறியதாக அச்செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
We have a very clear position on Kashmir, there is only one matter left- the return of Pakistan-Occupied Kashmir (PoK). There is nothing else to talk. If they talk about handing over terrorists, we can talk. We don’t have any intention of any other topic. We don’t want anyone to… pic.twitter.com/QWrmbFuK8y
— ANI (@ANI) May 11, 2025
அதேபோல், முப்படை அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில், மற்றொரு தகவலாக, “காஷ்மீர் விவகாரத்தில் நாங்கள் தெளிவான நிலைப்பாட்டில் இருக்கிறோம். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை திரும்ப பெறுவது மட்டுமே இன்னும் இருக்கிறது. இதை தவிர பேசுவதற்கு ஒன்றும் இல்லை. அவர்கள் பயங்கரவாதிகளை ஒப்படைப்பதை குறித்து பேசினால், நாங்களும் பேசுவோம். வேறு எது குறித்தும் பேசுவதற்கும் ஒன்றுமில்லை. யாரும் எங்களுக்கு மத்தியஸ்தம் செய்ய தேவையில்லை” என்ற ஒரு செய்தியையும் அச்செய்தி நிறுவனம் தகவலாக வெளியிட்டுள்ளது. மேலும் போர் நிறுத்த அறிவிப்பு பற்றி டிரம்ப் தன்னிச்சையாக அறிவித்ததால் இந்தியா அதிர்ச்சி; பாகிஸ்தானுடன் புரிந்துண்ர்வு ஏற்பட்டதாக அமெரிக்காவிடம் இந்தியா கூறவில்லை என்றும் தகவல்.

