Last Updated:
வக்ஃப் திருத்த மசோதாவிற்கு எதிராக 73 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து, வக்ஃப் சொத்துகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசின் வக்ஃபு சட்ட திருத்த மசோதா எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை மீறி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து புதிய வக்ஃபு சட்டம் அமலுக்கு வந்தது. மத்திய அரசின் புதிய வக்ஃபு சட்டம் இஸ்லாமியர்களுக்கு எதிராக உள்ளதாகக் கூறி பல்வேறு வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
உச்சநீதிமன்றத்தில் திமுக, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், விசிக, ஆம் ஆத்மி, மஜ்லிஸ் கட்சி, முஸ்லிம் லீக், விஜய்யின் தவெக, என அரசியல் கட்சிகள் உட்பட மொத்தம் 73 வழக்குகள், வக்ஃபு சட்டத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ளன. உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா, நீதிபதிகள் சஞ்சய் குமார், கே.வி. விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய மூவர் பெஞ்ச் இன்று இந்த 73 வழக்குகளையும் விசாரித்தது.
இந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு இடைக்காலத் தடை விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், வக்ஃப் என அறிவிக்கப்பட்ட சொத்துகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்றும் திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் புதிய உறுப்பினர் நியமனமும் செய்யக் கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
இதையும் படியுங்கள் : அதே மீரட்.. மீண்டும் மனைவியால் கணவர் கொலை – 10 முறை கடித்த பாம்பு.. விசாரணையில் வெளியான ட்விஸ்ட்!
வக்ஃப் வாரியத்தில் புதிய உறுப்பினர்கள் நியமனம் செய்வதிலும், வக்ஃப் நிலங்களைக் கையகப்படுத்துதல் ஆகியவற்றில் தற்போதைய நிலையே தொடர வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால நிவாரணம் வழங்கியுள்ளது.
மேலும், வக்ஃப் சட்ட திருத்தத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களில் 5 ரிட் மனுக்கள் மட்டுமே விசாரிக்கப்படும் என்றும், முக்கிய சட்ட கேள்விகளை எழுப்பும் மனுக்களை விசாரித்தே உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
மேலும் இந்த மனுக்கள் தொடர்பாக மத்திய அரசு, மாநில அரசுகள், வக்ஃப் வாரியம், 7 நாட்களில் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு, மே 5 ஆம் தேதி அடுத்தகட்ட விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.
April 17, 2025 3:46 PM IST
“வக்ஃப் சொத்துகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது” – உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு

