Last Updated:
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டுவருவதற்கான எந்த திட்டமும் பரிசீலனையில் இல்லை எனத் தெரிவித்தார்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுவந்த ஓய்வூதியத் திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டு, ஜனவரி 1, 2004-க்குப் பிறகு பணியில் அமர்த்தப்பட்டவர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்பட்டது. இதனை மாற்றி, மீண்டும் ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தையே செயல்படுத்த வேண்டும் என தொழிற்சங்கங்கள் போராடி வருகின்றன.
இந்நிலையில், நடந்துவரும் மழைக் காலக் கூட்டத்தொடரில் நேற்று (11ஆம் தேதி) திருத்தப்பட்ட புதிய வருமான வரி சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா குறித்து பேசியபோது, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்தும் முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.
நாடாளுமன்றத்தில் நேற்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், “தேசிய ஓய்வூதிய முறையின் (NPS) கீழ் வரும் மத்திய அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை (OPS) மீண்டும் கொண்டுவருவதற்கான எந்த திட்டமும் இந்திய அரசின் பரிசீலனையில் இல்லை” எனத் தெரிவித்தார்.
முன்னதாக நேற்று நாடாளுமன்றத்தில், திருத்தப்பட்ட புதிய வருமான வரி சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது. 1961 வருமான வரி சட்டத்திற்கு மாற்றாக கடந்த பிப்ரவரி மாதத்தில் புதிய வருமான வரி மசோதாவை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்தது. இந்த மசோதா மீது விமர்சனங்கள் எழுந்த நிலையில், பாஜக எம்பி பைஜெயந்த் பாண்டா தலைமையிலான தேர்வுக் குழுவுக்கு அனுப்பப்பட்டது.
தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 8ஆம் தேதி பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த மசோதாவை திரும்ப பெற முடிவு செய்யப்பட்டது. மேலும் பாஜக எம்பி பைஜெயந்த் பாண்டா தலைமையிலான தேர்வுக்குழு, அளித்த பரிந்துரைகளின்படி மாற்றம் செய்யப்பட்டு புதிய மசோதா தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, மக்களவையில் புதிய வருமான வரி மசோதாவை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார். தேர்வுக்குழு அளித்த 285 பரிந்துரைகளும் ஏற்றுக்கொள்ளப்பட்டு இந்த புதிய மசோதா உருவாக்கப்பட்டுள்ளதாகவும், வருமான வரி விதிமுறைகளை புதுப்பித்து சீரமைக்கும் நோக்கில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
60 ஆண்டுகளுக்கு மேலாக இருந்த பழைய வருமான வரி சட்டத்தை எளிதாக்கும் வகையில் இந்த மசோதா உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
August 12, 2025 3:42 PM IST
Old Pension Scheme : “பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமலுக்கு வருமா?” – நாடாளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் பதில்!

