International oi-Mathivanan Maran
Updated: Thursday, July 6, 2023, 10:23 [IST]
கொழும்பு: இலங்கையில் மதங்களை இழிவுபடுத்துபவர்களுக்கு எதிராக புதிய சட்டம் கொண்டுவரப்படும் என அந்நாட்டின் புத்தசாசன, மத விவகாரங்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க மீண்டும் தெரிவித்துள்ளார். இலங்கையில் அண்மையில் பவுத்த மதத்தை இழிவுபடுத்தும் வகையில் நகைச்சுவை நிகழ்ச்சியில் நடிகை நடாஷா எதிரிசூரிய கருத்துகளை தெரிவித்திருந்தார். இது மிகப் பெரும் சர்ச்சையாக வெடித்தது. இதனைத் தொடர்ந்து நடாஷா எதிரிசூரிய மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்நிலையில் இலங்கையை விட்டு தப்பி செல்வதற்காக கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையம் சென்ற நிலையில் நடாஷா எதிரிசூரியா கைது செய்யப்பட்டார். தற்போது அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியிருக்கிறது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த இலங்கை புத்தசாசன, மத விவகாரங்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க, எந்த ஒரு மதத்தையும் யாரும் இழிவுபடுத்த அனுமதிக்க முடியாது. மத சுதந்திரம் என்ற பெயரில் இத்தகைய செயல்பாடுகளை ஏற்றுக் கொள்ளவும் முடியாது. நடாஷா எதிரிசூரியா, பவுத்த மத அமைச்சகத்தின் தலையீட்டால்தான் கைது செய்யப்பட்டார். பொதுவாக பவுத்த மதத்தை இழிவுபடுத்தும் போக்குகளை நாங்கள் தடுப்பது இல்லை என்கிற விமர்சனம் முன்வைக்கப்படுகிறது. ஆனால் நடாஷா விவகாரத்தில் உடனே நடவடிக்கை எடுத்தோம் என்பதை அவர்கள் மறந்தும் விடுகின்றனர். இலங்கையில் மதங்களை விமர்சித்து, மதம் சார்ந்தவற்றை திரிபுபடுத்தி பேசுவதை தடுக்க வகை செய்யும் சட்டம் ஒன்றை நாடாளுமன்றத்தில் கொண்டுவர முயற்சித்து கொண்டிருக்கிறோம் என்றார். நடாஷா விவகாரம் தொடங்கியது முதலே புத்த சாசன, மத விவகாரங்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க இத்தகைய சட்டம் தொடர்பாக தொடர்ந்து வலியுறுத்தி கருத்து தெரிவித்து வருகிறார். இன்னொரு பக்கம், தொல்பொருள் துறை ஆய்வு விவகாரத்தில் இதே அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தமிழர்களுக்கு எதிராக செயல்பட அதிகாரிகளை தூண்டுகிறார்; தமிழர் நிலங்களை பறிப்பதற்கு பின்னணியில் இருக்கிறார்; ஆகையால் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க மீது நடவடிக்கை எடுத்து அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என தமிழ்க் கட்சிகள் வலியுறுத்தியும் வருகின்றன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்பி சுமந்திரனும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி இருந்தார்.
நாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற
Allow Notifications
You have already subscribed English summary
Srilanka’ Buddhist Affairs, Religious and Cultural Affairs Minister Vidura Wickramanayaka said that Sri Lanka’s government will frame new laws to combat all actions that jeopardize religious harmony.

