தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த கவீன்குமாரின் தந்தை சந்திரசேகரை அழைத்துக் கொண்டு தமிழ்நாடு முதல்வர மு.க ஸ்டாலினை தலைமை செயலகத்தில் வைத்து சந்தித்திருக்கிறார் வி.சி.க தலைவர் திருமாவளவன்.
கவினின் குடும்பத்தினருக்கு அரசு வேலையும் பாதுகாப்பும் வேண்டும், ஆணவப்படுகொலை தடுப்புச்சட்டத்தை நிறைவேற்றிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முதல்வரிடம் முன்வைக்கப்பட்டிருக்கின்றன.

முதல்வர் சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய கவின்குமாரின் தந்தை சந்திரசேகர் “கவினைக் கொலை செய்தவர்களின் இரண்டு பேர் இன்னும் கைது செய்யப்படவில்லை, அவர்களை விரைந்து கைது செய்ய வேண்டும் என முதல்வரிடம் கோரிக்கை வைத்தேன். தைரியமாக இருங்கள் நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் உறுதி அளித்தார்” என்றார்.
தொடர்ந்து பேசிய திருமாவளவன் “கவின்குமாரின் குடும்பத்துக்குப் பாதுகாப்பான சூழல் இல்லாததால், அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். அதேசமயம் கவின்குமாரின் தம்பிக்கு அரசுப் பணி வழங்க வேண்டும் என முதல்வரிடம் கோரிக்கை வைத்தோம். மேலும் ஆணவக் கொலைகளுக்கு எதிராகச் சட்டம் இயற்ற வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறது. இதனை தேர்தல் அரசியலோடு பொருத்திப் பார்க்கக் கூடாது” என்றார்.
