மேலும், பிரிட்டன் நாடாளுமன்ற துணைச் செயலர் தாம்சன், அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, கனடா, ஜெர்மனி, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் தூதர்களும் வந்திருந்தனர்.
சிந்து நதி தீரத்திலுள்ள அனைத்து நதிகளின் நீரைத் திருப்திகரமாகப் பகிர்ந்து கொள்வது பற்றி உடன்படுவதுடன், இவ்விஷயத்தில் இரு நாடுகளின் பொறுப்புகளையும் உரிமைகளையும்கூட உடன்பாடு வரையறுத்தது. சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து, சுமார் 12 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்துவந்த நதி நீர்த் தகராறு முடிவுக்கு வந்ததாக அப்போது இரு தரப்பும் கொண்டாடியது; உலகின் பல்வேறு நாடுகளும்கூட வாழ்த்தின; வரவேற்றன.
அமெரிக்க தலைவர்கள் பாராட்டு
இந்த உடன்பாடு எட்டப்பட்ட காலத்தில் அமெரிக்காவில் அதிபர் தேர்தலுக்கான பிரசாரம் நடந்துகொண்டிருந்தது.
சிந்து நதி நீர்ப் பகிர்வு உடன்பாட்டை எட்டியதற்காக இந்தியா, பாகிஸ்தான் நாடுகளின் தலைவர்களை – நேருவையும் அயூப் கானையும் – பாராட்டி அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் பணம் செலுத்தி நியூயார்க் டைம்ஸில் விளம்பரங்களை வெளியிட்டிருக்கின்றனர்.
இந்த விளம்பரத்தில் கென்னடி, லிண்டன் ஜான்சன் மற்றும் இரு கட்சிகளின் முக்கிய செனட்டர்களும் கையெழுத்திட்டிருந்தனர்.
விளம்பரத்தில், ‘தங்கள் மக்களின் பொது நலனுக்காக சிந்து நதி தீர தண்ணீரைப் பகிர்ந்து கொள்வதற்கான உடன்பாட்டில் கையெழுத்திட்டு தீர்க்க தரிசனத்துடன் நடந்துகொண்டும், எவ்வளவு சிக்கலான சர்வதேச பிரச்சினையாக இருப்பினும் பொறுமையுடன் பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலம் தீர்வு காண்பது சாத்தியமே என்பதை உலகுக்கு எடுத்துக் காட்டியதற்காகவும் இந்தியப் பிரதமர் நேருவையும் பாகிஸ்தான் அதிபர் அயூப் கானையும் பாராட்டி வணங்குகிறோம்’ என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
புதிய உறவின் அடையாளம்!
இந்தியா – பாகிஸ்தான் இடையில் உருவாகிவரும் புதிய உறவின் அடையாளம்தான் தன்னுடைய வருகையும் சிந்து நதி நீர்ப் பகிர்வு உடன்பாடும் என்று கராச்சி நகர்மன்றம் அளித்த வரவேற்பில் பேசிய பிரதமர் நேரு குறிப்பிட்டார்.