புதுச்சேரி அரசில் மொத்தம் 54 துறைகள் உள்ளன.இவற்றில் முதன்மையாக பொதுப்பணித் துறை உள்ளது. பல்வேறு அரசுத் துறைகளுக்கு கட்டடங்களை உருவாக்கியும், அவற்றை, பராமரித்தல் மற்றும் புதுப்பித்தல் போன்ற முக்கிய பணிகளை பொதுப்பணித்துறை மேற்கொண்டு வருகின்றது. இந்துறையின் மூலம் ஆண்டிற்கு 400 கோடி ரூபாய் மேல் கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன.
முக்கியத்துவம் வாய்ந்த இத்துறையை மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது பல்வேறு நிலைகளில் அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.எனவே பல கோடிகள் புழங்கும் பொதுப்பணித் துறை முழுவதுமாக மறுகட்டமைப்பு செய்ய அரசு முடிவு செய்துள்ளது.
அதன் ஒரு பகுதியாக பணியில் சேர்ந்துள்ள அரசு ஊழியர்களுக்கு காலத்திற்கேற்ப திறன்களை வளர்க்க தனியாக கேரியர் போர்ட்டலை ஏற்படுத்த பொதுப்பணித் துறை திட்டமிட்டுள்ளது.இந்த தொழில்நுட்பம் தொடர்பாக இறுதி கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகின்றது.
பொதுப்பணித் துறையில் குடிநீர் விநியோகம்,கழிவு நீர் பராமரிப்பு,நீர்பாசனம் என முக்கிய பணிகள் செய்யும் அனைத்து ஊழியர்கள் இந்த தனி போர்ட்டலின் கீழ் கொண்டு வரப்பட உள்ளனர். இவர்களுக்கு குறுகிய கால பயிற்சிகள்,நீண்ட கால பயிற்சிகள் என அனைத்தையும் பிரபல கல்வி மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களும் ஒருங்கிணைந்து பயிற்சி தர உள்ளது.
இது தொடர்பாக ஐ.ஐ.டி.,உள்பட நாடு முழுவதும் உள்ள முக்கிய தொழில்நுட்ப நிறுவனங்களும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகின்றது.சாதாரணமாக தெரிந்து கொள்ள வேண்டிய தொழில்நுட்ப பயிற்சி,பதவி உயர்வுக்கான கட்டாயமான பயிற்சிகளும் ஒருங்கிணைத்து தரப்பட உள்ளது.
பொதுப்பணித் துறையில் தொழில்நுட்பம் அதிவேக மாறி வருகின்றது. ஆனால் அரசு ஊழியர்கள் காலத்துகேற்ப மாறாமல் அப்படியே உள்ளனர். இதனால் மக்கள் பணிகள் வேகமாக நடக்காமல் ஆமை வேகத்தில் நடக்கின்றது.எனவே துரித சேவை அளிக்க இந்த பயிற்சிகள் கட்டாயம் உதவும் என்பதால் சீரான இடைவெளியில் அனைவருக்கும் பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த தொழில்நுட்ப பயிற்சிக்காக, இந்தியாவின் பிற மாநிலங்களுக்கு அனுப்புவதோடு மட்டுமின்றி,வெளிநாடுகளுக்கு அனுப்பியும் அங்குள்ள புதிய தொழில்நுட்பத்தை அரசு ஊழியர்களுக்கு அறிமுகப்படுத்த பொதுப்பணித்துறை திட்டமிட்டு, தனி போர்ட்டலை அமைப்பதற்கான அனைத்து பணிகளையும் துரிதப்படுத்தி வருகின்றது.
எதற்காக பயிற்சி
பொதுப்பணித் துறை செயலர் மணிகண்டன் கூறும்போது, தொழில்நுட்பம் இன்று அசுர வேகத்தில் வளந்து வருகிறது. விரைவான வளர்சி,முன்னேற்றத்திற்கு தொழில்நுட்பம் முக்கிய பங்காற்றி வருகின்றது.இது மாற்றம் வளர்ச்சி விகிதத்தை துரிதப்படுத்துகிறது. எனவே தொழில்நுட்பத்தின் போக்குகளை அரசு ஊழியர்கள் அறிந்து கொண்டால் மட்டுமே அரசின் இலக்கினை எட்டி பிடிக்க முடியும்.எனவே, வளர்ந்து வரும் சமீபத்திய நவீன தொழில்நுட்ப அறிவை வளர்ந்துகொள்ளவேண்டும் என்பதற்காக இந்த முயற்சியை மேற்கொண்டு வருகிறோம் என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


