முதுநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவு தேர்வு வினாத்தாள் வெளியாகவில்லை என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
இளநிலை நீட் தேர்வு சர்ச்சைக்கு மத்தியில் ஜூன் மாதம் நடைபெற இருந்த முதுநிலை நீட் தேர்வு ஆகஸ்ட் 11ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் முதுநிலை நீட் தேர்வுக்கான வினாத்தாள் முன்கூட்டியே கசிந்ததாக மீண்டும் ஒரு பூகம்பம் வெடித்துள்ளது.
முதுநிலை நீட்தேர்வு நடைபெற சில நாட்களே உள்ள நிலையில், டெலிகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் முன்கூட்டியே வினாத்தாள் கசிந்ததாக சர்ச்சை எழுந்துள்ளது. ‘NEET PG Leaked Materials என்ற பெயரில் டெலிகிராம் சேனல் ஒன்று செயல்படுவதாகவும், அதில் இது தொடர்பான தகவல்கள் வெளியாகி வருவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள மத்திய அரசு, Telegram சமூக வலைதள பக்கத்தில் முதுநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவு தேர்வு வினாத்தாள் இருப்பதாகவும் உரிய தொகையை செலுத்தி அதைப் பெற்றுக் கொள்ளலாம் எனவும் வந்த தகவல் தவறானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வர்கள் இது போன்ற போலியான செய்திகளை நம்ப வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
தேர்வர்களை ஏமாற்றும் நோக்கத்தில் டெலகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள தகவல் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்றும், தேசிய மருத்துவ அறிவியல் தேர்வு வாரியம் எச்சரித்துள்ளது.
.
