சிதம்பரம்: இந்தியாவிலேயே முதன்முறையாக மூன்று லட்சம் ருத்ராட்சங்களைக் கொண்டு செய்யப்பட்ட தெருவடைச்சான் சப்பரத்தில் பஞ்சமூர்த்திகள் வீதி உலா புதன்கிழமை இரவு கோலாகலமாக நடைபெற்றது.
சிவ வாத்தியங்கள் முழங்க 4 ரத வீதிகளை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்த சுவாமியை, பக்தர்கள் திரளாக பங்கேற்று தரிசித்தனர்.
பஞ்சபூத ஸ்தலங்களில் ஆகாய ஸ்தலமாக விளங்கும் உலக பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயில் ஆருத்ரா தரிசன விழா கடந்த ஜன. 4 – ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. சிகர நிகழ்ச்சியாக ஜன.12-ம் தேதி தேரோட்டமும், ஜன.13-ம் தேதி மார்கழி ஆருத்ரா தரிசன விழாவும் நடைபெறுகிறது.
ஐந்தாவது நாள் உற்சவ விழாவான தெருவடைச்சான் விழா கோலாகலமாக நடைபெற்றது. காசியில் இருந்து கொண்டு வரப்பட்ட மூன்று லட்சம் ருத்ராட்சங்களைக் கொண்டு வெள்ளி ரிஷப வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் சிவ வாத்தியங்கள் முழங்க எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.
