1947-ல் இந்தியா சுதந்திரம் பெற்ற போது, இந்தியாவில் பாரம்பரியமாக ஆட்சி மாற்றம் நடக்கும்போது பின்பற்றப்பட்ட நடைமுறையை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி மூதறிஞர் ராஜாஜியின் ஏற்பாட்டில், திருவாவடுதுறை ஆதீனத்திலிருந்து செங்கோல் தயாரித்து எடுத்துச் செல்லப்பட்டு, நாட்டின் முதல் பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் நேருவிடம், தேவாரப் பதிகங்கள் பாடப்பட்டு வழங்கப்பட்டது. அடிமைச் சங்கிலியில் இருந்து விடுபட்டு, சுதந்திரப் பறவையாகி விட்டோம் என்பதை அறிவித்தது, தமிழையும், சைவத்தையும் இரு கண்களாக போற்றும் திருவாவடுதுறை ஆதீனத்துச் செங்கோல் தான்.
இப்படி நமது பாரதத்தின் பழமையான வரலாறு, கலாசாரத்தோடு தொடர்புடைய, தமிழகத்தின் பெருமிதமான நம் ஆதினத்து செங்கோல், இந்திய நாடாளுமன்றத்தை நிரந்தரமாக அலங்கரிக்க இருக்கிறது. இது உலகெங்கும் வாழும் ஒவ்வொரு தமிழரும் நினைத்து நினைத்து பெருமிதம் கொள்ளக்கூடிய ஒன்றாகும். புதிய நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் செங்கோல் வைக்க முடிவு செய்த மாண்புமிகு பாரத பிரதமர் நரேந்திர மோடி, மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷா, நாடாளுமன்ற மக்களவை சபாநாயகர் திரு. ஓம் பிர்லா ஆகியோருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

