தமிழகத்தில் ஏப்ரல் 19-ஆம் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கடந்த 20-ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது.இதனை தொடர்ந்து திருவள்ளூர் தனி தொகுதியில் முதலாவதாக 25 ம் தேதி தேமுதிக வேட்பாளர் நல்லதம்பி தனது வேட்பு மனுவை முன்னாள் அமைச்சர்கள் புடைசூழ வேட்புமனு தாக்கல் செய்ய அவரை தொடர்ந்து பாஜக வேட்பாளர் பொன் வி. பாலகணபதி, பகுஜன் சமாஜ் கட்சி டி.தமிழ்மதி மற்றும் சுயேட்சை வேட்பாளர் என 4 பேர் தனது விருப்பமானவை தாக்கல் செய்தனர்.
இதனைத் தொடர்ந்து 26 ம் தேதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜெகதீஷ் சந்தர் தனது கட்சி நிர்வாகிகளுடன் பாரதியார், ராஜராஜ சோழன், டாக்டர் அம்பேத்கர் ஆகியோர் வேடம் அணிந்து ஊர்வலமாக வந்து தனது வேட்பு மனுவை தேர்தல் நடத்தும் அலுவலரும் திருவள்ளூர் மாவட்ட கலெக்டருமான பிரபுசங்கரிடம் தாக்கல் செய்தார்.
அப்போது வேட்பு மனு தாக்கலின் போது தேர்தல் நடத்தும் அலுவலர் வேட்பாளர் ஜெகதீஷ்சந்தரிடம் உறுதி மொழியை வாசிக்க அறிவுறுத்தினார்.அப்போது ஜெகதீஷ் சந்தர் உறுதி மொழியை வாசிக்க தடுமாறி ஒவ்வொரு வார்த்தையாக பிழையோடு படிக்க ஆரம்பித்ததை தொடர்ந்து மாவட்ட கலெக்டரே உறுதி மொழியை வாசிக்க அதனை நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜெகதீஷ் சந்தர் வாசித்தார்.
தமிழ் வாழ்க என்ற முழக்கத்தோடு நாம் தமிழர் கட்சி சீமான் முழுங்கி வரும் வேளையில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் ஒருவர் தமிழில் உறுதி மொழியை வாசிக்க தடுமாறியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.


