புதுடில்லி: தலைமை தேர்தல் கமிஷனர் மற்றும் தேர்தல் கமிஷனர்களை நியமிக்க, ஒரு செயல்பாட்டு முறையை உருவாக்க வகை செய்யும் மசோதாவுக்கு, ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று ஒப்புதல் அளித்தார்.
‘தேர்தல் கமிஷனர்கள் நியமன சட்ட திருத்த மசோதா – 2023’ஐ, சமீபத்தில் மத்திய அரசு இயற்றியது. அதில், தலைமை தேர்தல் கமிஷனர் மற்றும் பிற தேர்தல் கமிஷனர்களை நியமிக்கும் குழுவில் பிரதமர், எதிர்க்கட்சி தலைவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி இடம் பெறுவர் என்ற நடைமுறையை மாற்றி, தலைமை நீதிபதிக்கு பதிலாக கேபினட் அந்தஸ்து பெற்ற மத்திய அமைச்சர் இடம் பெறுவார் என்ற விதிமுறை சேர்க்கப்பட்டது.
இதையடுத்து இந்த மசோதா, ராஜ்யசபாவில் டிச., 12ம் தேதியும், லோக்சபாவில், ௨௧ம் தேதியும் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், இம்மசோதாவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று ஒப்புதல் அளித்தார்.
இதன் வாயிலாக, தலைமை தேர்தல் கமிஷனர் மற்றும் தேர்தல் கமிஷனர்கள் நியமனத்துக்கு சட்ட அமைச்சர் தலைமையில், இரு செயலர்கள் அடங்கிய தேடல் குழு அமைக்கப்படும். இந்த குழு, தகுதி வாய்ந்த ஐந்து பேரின் பெயர்களை அந்த பதவிகளுக்கு பரிந்துரை செய்யும். அவர்களில் தகுதியான நபர்களை, தலைமை தேர்தல் கமிஷனர் மற்றும் தேர்தல் கமிஷனர்களாக, பிரதமர் தலைமையிலான குழு நியமிக்கும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


