சேப்பாக்கம் – திருவல்லிக்கேணித் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக வெற்றிபெற்று, அவரின் வாழ்த்துகளைப் பெறச் சென்றேன். என் கைகளை இறுகப் பற்றிக்கொண்ட முரசொலி செல்வம் மாமா, `சேப்பாக்கம் -திருவல்லிக்கேணித் தொகுதி, யார், யார் நின்னு ஜெயிச்ச தொகுதின்னு உனக்குத் தெரியும். அவங்களோட பணிகள் நிச்சயம் உன்னை வழிநடத்தும். அதையெல்லாம் மனசுல வச்சு, மக்கள் பணியில உன்னை ஈடுபடுத்திக்க’ என்று அன்போடு வாழ்த்தினார். நான் துணை முதலமைச்சர் பொறுப்பினை ஏற்றபோது, கடந்த செப்டம்பர் 28-ஆம் தேதி இரவு என்னை வாழ்த்திய செல்வம் மாமா, `இந்த வாழ்த்து, நீ துணை முதலமைச்சரானதுக்கு இல்ல. இவ்வளவு நாளா செஞ்சப் பணிகளுக்கானதும் இல்ல. இனிமேல நீ என்ன செய்யப்போறன்னு பார்க்கலாம்.
அதை மனசுல வச்சு பணியாற்று’ என்று உரிமையோடு அவர் சொன்னதுதான், எனக்கான அவருடைய இறுதி அறிவுரை என்பது இப்போதுதான் புரிகிறது. அண்ணா, கலைஞர், முரசொலி மாறன் ஆகியோர் வழியில் திரைத்துறையின் வழியாகவும் கொள்கை வளர்த்தவர். முரசொலியின் முகங்களில் முக்கியமானவர். எனினும், இளையோரின் கருத்துக்களை உள்வாங்கிடவும் அவர் தவறியதில்லை. இளைஞர் அணி முன்னெடுத்த ‘திராவிட மாடல்’ பயிற்சிப் பாசறைக் கூட்டங்களைக் கவனித்து ஆலோசனைகளை வழங்கியவர். முரசொலியில் இளைஞர் அணி சார்பில் பாசறைப் பக்கத்தைத் தொடங்க வேண்டும் என்று கழகத் தலைவர் அவர்களிடம் அனுமதி கேட்ட போது, ‘முதல்ல முரசொலி செல்வம் அண்ணனைப் பார்த்து, அவரிடம் அனுமதி வாங்கிட்டு வா’ என்றுதான் சொன்னார்கள்.
