Last Updated:
2006 மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட 12 பேரையும் மும்பை உயர்நீதிமன்றம் விடுவித்தது.
2006ஆம் ஆண்டு ஜூலை 11ஆம் தேதி இந்தியாவை அதிர்ச்சியில் ஆழ்த்திய மும்பை தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 12 பேரையும் விடுவித்து மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மும்பையில் கடந்த 2006ஆம் ஆண்டு ஜூலை 11ஆம் தேதி மாலை 6.24 முதல் 6.35 வரையிலான 11 நிமிடங்களில் 7 குண்டுகள் அடுத்தடுத்து ரயில்களில் வெடித்தன. இந்த கோர சம்பவத்தில், மொத்தம் 189 நபர்கள் பலியாகினர். மேலும், சுமார் 800 நபர்கள் காயங்களுடன் மீட்கப்பட்டனர்.
இந்தத் தொடர் குண்டுவெடிப்புக்கு லஷ்கர்-இ-தொய்பா (LeT) உடன் தொடர்புடைய பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-கஹார், ஒரு தொலைக்காட்சி சேனலுக்கு மின்னஞ்சல் மூலம் பொறுப்பேற்றது எனும் தகவலும் வெளியானது.
இந்த வழக்கில் 13 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 12 பேரை மகாராஷ்டிரா திட்டமிட்ட குற்றக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் அடிப்படையில் குற்றவாளிகள் என கீழமை நீதிமன்றம் கடந்த 2015ஆம் ஆண்டு உத்தரவிட்டது.
அதில், கமல் அன்சாரி, பைசல் ஷேக், எஸ்தேஷாம் சித்திக், நவீத் கான் மற்றும் ஆசிப் பஷீர் கான் ஆகிய ஐந்து குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. முகமது அலி, முகமது சாஜித் அன்சாரி, மஜித் ஷாஃபி, டாக்டர் தன்வீர் அன்சாரி, முஸாமில் ஷேக், ஜமீர் ஷேக் மற்றும் சோஹைல் ஷேக் ஆகிய ஏழு பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் அனில் கிலோர் மற்றும் நீதிபதி ஷியாம் சந்தக் அமர்வு, வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 12 பேரையும் விடுவித்து இன்று உத்தரவிட்டது. மேலும், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான வழக்கை நிரூபிக்க அரசு தரப்பு “முற்றிலும் தோல்வியடைந்துவிட்டது” என்றும் உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
“குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான வழக்கை நிரூபிக்க அரசு தரப்பு முற்றிலும் தவறிவிட்டது. குற்றம் சாட்டப்பட்டவர் குற்றம் செய்தார் என்பதை நம்புவது கடினம். எனவே, அவர்களின் தண்டனை ரத்து செய்யப்படுகிறது” என தெரிவித்த நீதிமன்றம், குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் வேறு எந்த வழக்கிலும் இல்லை என்றால் உடனடியாக விடுதலை செய்யப்படலாம் எனவும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது.
July 21, 2025 4:22 PM IST
189 பேர் கொல்லப்பட்ட மும்பை ரயில் தொடர் குண்டுவெடிப்பு… 12 பேரையும் விடுவித்து உயர் நீதிமன்றம் உத்தரவு

