மும்பை மாநகராட்சிக்கு அடுத்த சில மாதங்களில் தேர்தல் நடக்க இருக்கிறது. இத்தேர்தலில் வெற்றி பெற்று மேயர் பதவியைப் பிடிக்க வேண்டும் என்பது பா.ஜ.கவின் நீண்ட நாள் கனவாக இருந்து வருகிறது.
தற்போது சிவசேனா இரண்டாக உடைந்துவிட்டதால் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி மேயர் பதவியைப் பிடித்துவிட வேண்டும் என்பதில் பா.ஜ.க தீவிரமாக இருக்கிறது.
இத்தேர்தல் குறித்து ஆலோசிப்பதற்காக பா.ஜ.க தலைவர்கள் மும்பையில் கூடி ஆலோசித்தனர்.
இதில் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் மற்றும் மாநில பா.ஜ.க நிர்வாகிகள், தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இதில் பேசிய மும்பை பா.ஜ.க தலைவர் அமீத் சாதம், “‘மாநகராட்சி தேர்தல் என்பது மும்பையைப் பாதுகாப்பாக வைத்திருப்பதற்கான போர்.
சர்வதேச நாடுகளை சேர்ந்தவர்கள் ஊடுருவி, தங்களது நிலங்களை மாற்றி வருகின்றனர். சில நகரங்களின் மேயர்களின் குடும்பப்பெயர்களைப் பாருங்கள். மும்பையில் அந்த மாதிரி வேண்டுமா?
லண்டனில் மேயராக பாகிஸ்தான் வம்சாவழியை சேர்ந்த சாதிக் கான் என்பவர் இருக்கிறார். அங்கு புலம் பெயர்ந்தவர்களுக்கு எதிராக மிகப்பெரிய அளவில் போராட்டம் நடந்தது.” என்று பேசினார்.
