புதிய நாடாளுமன்றத்தின் திறப்பு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த விழாவில் சுமார் ஒரு மணிநேரம் நடந்த பூஜைக்குப் பிறகு செங்கோல் முன் விழுந்து கும்பிட்ட பிரதமர் மோடி, தமிழக ஆதீனங்களின் கைகளால் செங்கோலைப் பெற்று மக்களவை சபாநாயகர் இருக்கைக்கு அருகில் நிறுவினார். மேலும், புதிய நாடாளுமன்றக் கட்டடத்தின் கல்வெட்டையும் மோடி திறந்துவைத்தார். புதிய நாடாளுமன்றக் கட்டுமானத்தில் ஈடுபட்டவர்களைச் சந்தித்து கெளரவித்தார். அதோடு, புதிய 75 ரூபாய் நாணயத்தையும், தபால் தலையையும் வெளியிட்டார்.
பின்னர் புதிய நாடாளுமன்றத்தில் முதன்முறையாக உரையாற்றிய மோடி, “ஒவ்வொரு நாட்டின் வளர்ச்சிப் பயணத்திலும் சில தருணங்கள் வரலாற்றுச் சிறப்புமிக்கதாக மாறும். மே 28 அத்தகையதுதான். இந்தியா ‘ஆசாதி கா அம்ரித்கால்’ கொண்டாடும் வேளையில், இந்திய மக்கள் அதன் ஜனநாயகத்துக்கு புதிய நாடாளுமன்றத்தைப் பரிசாக அளித்திருக்கின்றனர். இது வெறும் கட்டடம் அல்ல. 140 கோடி இந்திய மக்களின் லட்சியத்தின் சின்னம். மேலும், இது இந்தியாவின் உறுதியைப் பற்றிய செய்தியை உலகுக்கு வழங்குகிறது. இந்தப் புதிய நாடாளுமன்றம் தன்னிறைவு பெற்ற இந்தியாவின் எழுச்சிக்கு சாட்சியாக விளங்கும். செங்கோல் இங்கு நிறுவப்பட்டிருக்கிறது.
இந்தச் செங்கோல் சோழ வம்சத்தில் நீதி மற்றும் நல்லாட்சியின் அடையாளமாக இருந்தது. இப்படிப்பட்ட புனிதமான செங்கோலின் பெருமையை மீட்டெடுக்க முடிந்தது நம்முடைய அதிர்ஷ்டம். இனி அவை தொடங்கும்போதெல்லாம் இந்தச் செங்கோல் நம்மை ஊக்குவிக்கும். இந்தியா முன்னேறும்போது, உலகமும் முன்னேறும். இந்தியாவின் வளர்ச்சியின் மூலம் உலகின் வளர்ச்சிக்கும் இந்தப் புதிய நாடாளுமன்றம் வழிவகுக்கும்.
இந்தியா ஒரு ஜனநாயக நாடு மட்டுமல்லாது ஜனநாயகத்தின் தாயும்கூட. அடிமைத்தனத்துக்குப் பிறகு பலவற்றை இழந்து புதிய பயணத்தைத் தொடங்கிய நம் இந்தியா, பயணத்தில் பல ஏற்றத் தாழ்வுகளைக் கடந்து, சவால்களைக் கடந்து சுதந்திரத்தின் பொற்காலத்தில் நுழைந்திருக்கிறது. பல ஆண்டுக்கால அந்நிய ஆட்சி நம் பெருமைகளை நம்மிடமிருந்து பறித்தது. இன்றைக்கு இந்தியா அந்தக் காலனித்துவ மனநிலையை விட்டுச் சென்றுவிட்டது. இந்தப் புதிய நாடாளுமன்றம், பழைமையும், புதுமையும் ஒன்றாக இருப்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு.

