இங்கிலாந்தில் வரும் ஜூலை 4-ம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறும் என பிரதமர் ரிஷி சுனக் தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. 2016-ம் ஆண்டு பிரெக்ஸிட் வாக்கெடுப்புக்குப் பின் நடைபெறவிருக்கும் 3-வது பொதுத் தேர்தல் இது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து, தேர்தல் பிரசாரத்தில் அனைத்துக் கட்சியினரும் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர். இந்த நிலையில், கன்சர்வேட்டிவ் கட்சியின் செல்வாக்கு மிகுந்த 75-க்கும் மேற்பட தலைவர்கள், இந்தத் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என அறிவித்திருக்கின்றனர்.
வீட்டுவசதி அமைச்சர் மைக்கேல் கோவ்,“சேவை செய்வதற்கான வாய்ப்பு அற்புதமானது. ஆனால் வெளியேற வேண்டிய நேரம் இது. ஒரு புதிய தலைமுறை வழிநடத்த வேண்டும்” எனக் குறிப்பிட்டு, போட்டியிட விரும்பவில்லை எனக் தெரிவித்திருக்கிறார். அதே நேரம், எதிர்க்கட்சியான லேபர் கட்சியிலிருந்தும் 30 நாடாளுமன்ற உறுப்பினர்கள் போட்டியிடுவதிலிருந்து விலகியிருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், ஜூன் 7-ம் தேதி வரை வேட்பாளர்கள் பட்டியல் வெளியிட கால அவகாசம் இருக்கும் நிலையில், அடுத்தக்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் தயாரிக்கப்படுவதாக தகவல் வெளியாகியிருக்கிறது. பல ஆண்டுகள் ரத்த ஊழல் பிரச்சனைக்காக ரிஷி சுனக் இங்கிலாந்த் மக்களிடையே சமீபத்தில் மன்னிப்பு கேட்டார். மேலும் இவரின் மற்றும் இவரது சகாக்களின், அகதிகளுக்கு எதிரான கருத்துக்களுக்காக இவர் இவரது கட்சியிலேயே தனித்து விடப்பட்டுள்ளார் என்றும் தெரிய வருகிறது. சமீபத்திய உள்ளாட்சி தேர்தலிலும் இவரது கட்சி படுதோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.
