புதுக்கோட்டை: அமைச்சர் பொன்முடியின் உயர்கல்வித் துறை மாற்றப்பட்டுள்ளதற்கு, அவர் ஆளுநருடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வந்தார் என்பதால் அல்ல என மாநில சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி தெரிவித்தார்.
ஆளுநருடனான மோதல் போக்கை விட்டு கைவிட்டு, இணக்கமாக செயல்பட தமிழக அரசு விரும்பியதன் காரணமாகவே, அமைச்சர் பொன்முடியின் இலாகா மாற்றப்பட்டதாக தகவல்கள் வெளியானது.
இந்த நிலையில், பொன்முடி இலாகா மாற்றப்பட்டதற்கு ஆளுநருடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வந்தார் என்பது காரணமல்ல என அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.
இதுகுறித்து புதுக்கோட்டையில் புதன்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அமைச்சர் பொன்முடியின் உயர்கல்வித் துறை மாற்றப்பட்டுள்ளதற்கு, அவர் ஆளுநருடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வந்தார் என்பதால் அல்ல. உயர்கல்வித் துறை பின்தங்கிய சமூகத்தினருக்கும் சென்றடைய வேண்டும் என்பதற்காக மாற்றி வழங்கப்பட்டுள்ளது.
நானும் சட்டப்பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவைப் புறக்கணிக்கவில்லை. அன்றைய நாளில் எனக்கு வேறு பணிகள் இருந்தன. அதனால் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க முடியவில்லை. அதுகுறித்து அப்போதே பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் பதிவாளரிடத்தில் சொல்லிவிட்டேன்.
