இந்தியா கூட்டணியின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் தில்லியில் ஜூன் 1 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதில் மக்களவை தேர்தலுக்கு பின், எதிர்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணி ஆட்சியமைந்தால், பிரதமராக யாரை தேர்ந்தெடுப்பது? என்ற முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளது.
இந்த நிலையில், இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என்பதை திட்டவட்டமாக தெளிவுபடுத்தியுள்ளார் மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி.
மேற்கு வங்கத்தில் ரீமெல் புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை ஆய்வு செய்யவும், மேற்கு வங்கத்தில் மீதமுள்ள மக்களவை தொகுதிகளில் இறுதி கட்டமாக ஜூன் 1-ஆம் தேதி நடைபெற உள்ள வாக்குப்பதிவுக்காக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட வேண்டியிருப்பதாலும், அன்றைய நாளில் தன்னால் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க முடியாதென அவர் தெரிவித்துள்ளார்.
தொடக்கத்தில் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றிருந்த திரிணமூல் காங்கிரஸ், அதிலிருந்து விலகி தனியாக தேர்தலை சந்தித்தாலும், ஆட்சி அமைக்கும்போது இந்தியா கூட்டணிக்கு ஆதரவளிப்பேன் எனத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
