“என்னால் இந்தியா கூட்டணியை வழி நடத்த முடியும்” – மம்தா பானர்ஜி
கடந்த மக்களவை தேர்தலுக்கு முன்பு எதிர்க்கட்சிகள் இணைந்து உருவாக்கிய இந்தியா கூட்டணி தொடர்ந்து தலைமை இல்லாமல் செயல்படுகிறது. கூட்டணியின் அமைப்பாளர் என்று யாரையும் நியமிக்காமல் ஒருங்கிணைப்பாளர்கள் என்று கூறி சிலரை நியமித்தனர். அதுவும் இப்போது செயல்படாமல் இருக்கிறது. பாராளுமன்றத்தில் இந்தியா கூட்டணியின் நடவடிக்கைகளுக்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஒத்துழைப்பு கொடுக்காமல் தனியாக செயல்பட்டு வருகிறது.
இது குறித்து மம்தா பானர்ஜி தனியார் செய்தி டிவி சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில்,”‘இந்தியா கூட்டணியை உருவாக்கினேன். அதனை முன்னின்று நடத்துபவர்களால் அதனை நடத்த முடியாவிட்டால் நான் என்ன செய்ய முடியும். அனைவரையும் அரவணைத்துச் செல்லவேண்டும் என்றுதான் நான் சொல்கிறேன்”என்றார்.

நீங்கள் ஏன் இந்தியா கூட்டணிக்கு தலைமை தாங்கக்கூடாது என்று கேட்டதற்கு, ”வாய்ப்பு கொடுத்தால் இந்தியா கூட்டணியை சிறப்பாக நடத்துவேன். நான் மேற்கு வங்கத்தைவிட்டு வெளியில் செல்ல விரும்பவில்லை. மேற்கு வங்கத்தில் இருந்து கொண்டு என்னால் இந்தியா கூட்டணியை வழி நடத்த முடியும்”என்று தெரிவித்தார்.
திரிணாமுல் காங்கிரஸ்
இது குறித்து திரிணாமுல் காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் குனால் கோஷ் கூறுகையில்,”மம்தா பானர்ஜி இந்தியா கூட்டணியின் தலைமையை சுயலாபத்திற்காக கேட்கவில்லை. இது போன்ற பதவிகளை அவர் ஒருபோதும் விரும்பியதில்லை. பா.ஜ.க விற்கு எதிரான கூட்டணி தேவை என்பதால்தான் இந்தியா கூட்டணியை உருவாக்கினார். டெல்லி தலைமையை மம்தா பானர்ஜி விரும்பவில்லை.
மேற்கு வங்கம் தான் அவரது முழு கவனம். இந்தியா கூட்டணி மம்தா பானர்ஜியின் தலைமையை விரும்பினால் அவர் மேற்கு வங்கத்தில் இருந்து கொண்டு அந்த பணியை செய்வார்”என்றார்.

