“மதுரை மாநகராட்சிக்கு மறுசீரமைப்பு தேவை, முதலமைச்சர் தலையிட வேண்டும் என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒன்றிய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரத் துறை அமைச்சகம் சார்பில் இந்தியாவின் தூய்மையான நகரங்களின் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. 2024 – 2025 ஆண்டுக்கான தூய்மை நகரங்கள் குறித்த அறிக்கையானது, குப்பைகளை வீட்டுக்கு வீடு சேகரித்தல், குப்பைகளை வகைப்பிரித்தல், குப்பை மேடுகளை மறுசீரமைத்தல், நீர்நிலைகள், சந்தைகள், பொதுக் கழிப்பிடங்களின் தூய்மை ஆகியவற்றை ஆய்வுக்குட்படுத்தித் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் 10 லட்சத்துக்கும் மேல் மக்கள்தொகை கொண்ட 40 நகரங்களின் பட்டியலில் மதுரை கடைசி இடமான 40 வது இடத்தைப் பெற்றுள்ளது. மதுரை நகரத்தைப் பொருத்தவரையில் வீட்டுக்கு வீடு குப்பைகள் சேகரிக்கப்படுவது 37 சதவிகிதம், குப்பை வகைப்பிரித்தல் 26 சதவிகிதம், உருவாக்கப்படும் குப்பைகளை மறுசுழற்சி செய்து கையாளும் திறன் வெறும் 4 சதவிகிதம், குப்பை மேடுகளை மறுசீரமைத்தல் 25 சதவிகிதம் என்கிற அடிப்படையில் குறைவான மதிப்பெண்களைப் பெற்றுள்ளது.
அதேநேரம் குடியிருப்புகள், சந்தைகள், நீர்நிலைகளின் தூய்மை எனும் பிரிவுகளில் 100 சதவிகிதம் பெற்றுள்ளது. பொதுக் கழிப்பிடங்கள் மிகவும் தூய்மையின்றி இருப்பதை 3 சதவிகிதம் மதிப்பெண் பெற்றதை வைத்து அறிய முடிகிறது. மாநில அளவிலும் கணக்கெடுக்கப்பட்ட 651 நகர்ப்புற உள்ளாட்சிகளில் மதுரை 543 -வது இடத்தையேப் பெற்றுள்ளது. இக்கணக்கெடுப்பின் நெறிமுறையில் சில குறைபாடுகள் இருந்தாலும் மதுரை நகரத்தின் தூய்மை மிக மோசமாக உள்ளது என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
