இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்க உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் ஞாயிற்றுக்கிழமை எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில், தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் சம்பவங்களின் எண்ணிக்கை சமீப காலங்களில் கவலை அளிக்கக் கூடிய வகையில் அதிகரித்துள்ளதை சுட்டிக் காட்டியுள்ள முதல்வர், 22.02.2025 அன்று இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 32 மீனவர்களையும் அவர்களது 5 மீன்பிடி விசைப்படகுகளையும் இலங்கை கடற்படையினர் 23.02.2025 அன்று கைது செய்யப்பட்டுள்ளதையும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதைத் தடுக்க இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும் என்று தான் பலமுறை கேட்டுக் கொண்ட போதிலும், இலங்கை கடற்படையினரின் கைது நடவடிக்கைகள் இன்னும் அதிக அளவில் தொடர்வதாகவும், இந்த ஆண்டில் மட்டும், எட்டு வெவ்வேறு சம்பவங்களில் 119 மீனவர்களும், 16 படகுகளும் இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ளதையும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
