மத்திய பிரதேச மாநிலம் குவாலியரை சேர்ந்தவர் விஷால் பத்ரா. கார் உதிரிப் பாகங்கள் விற்பனை கடை வைத்துள்ள இவர், திருமணமாகி குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருடன், விஷாலின் தாயார் 70 வயதான சரளாவும் வசித்து வருகிறார். சரளாவை, முதியோர் இல்லத்திற்கு அனுப்பக் கூறி, விஷாலின் மனைவி நீலிகா வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால், பெற்றெடுத்து வளர்த்து ஆளாக்கிய தனது தாயாரை, முதியோர் இல்லத்திற்கு அனுப்ப முடியாது என்று விஷால் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இதனால், தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் கணவர் கொடுமைப் படுத்துவதாக கூறி, தனது தந்தையிடம் நீலிகா நீலிக்கண்ணீர் விட்டுள்ளார். அதைக் கேட்டு தனது மகன் மற்றும் உறவினர்களுடன் நீலிகாவின் தந்தை அங்கு வந்துள்ளார். வந்தவர் என்ன ஏது என்று கேட்காமல், மருமகனின் கன்னத்தில் அறைந்துள்ளார். அதனால், ஆத்திரமடைந்த விஷாலும், மாமனார் என்றும் பார்க்காமல் பதிலுக்கு தாக்கியுள்ளார்.
உடனே, நீலிகாவின் சகோதரர் மற்றும் உறவினர்கள் சுற்றி வளைத்து பிரகாஷை தாக்கினர். தனது மகன் தாக்குதலுக்கு உள்ளாவதை கண்டு துடிதுடித்த அவரின் தாயார் சரளா, சண்டையை விலக்கி விட்டுள்ளார். ஆனால், நீலிகா மாமியாரை தலை முடியை பிடித்து இழுத்துப் போட்டு ஆக்ரோஷமாக தாக்கினர். வீட்டிற்குள் ஏற்பட்ட சண்டை வீதிக்கு வந்ததால், ஒட்டுமொத்த குடும்பத்தினரும் சேர்ந்து விஷால் மற்றும் வயதான அவரின் தாயார் சரளாவை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர்.
Also Read: டார்கெட் முடிக்காததால் கொடூரம்.. ஊழியர்களை நாய் போல் சங்கிலியால் கட்டி இழுத்த அவலம்!
தடுக்க வந்த அக்கம்பக்கத்தினரையும் அவர்கள் மிரட்டியதாக தெரிகிறது. இது ஒருபுறம் இருக்க, சிறுவர்கள் கூட பேட்டை எடுத்து வந்து தாக்கியதை கண்டு அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். மனைவி நீலிகாவே, கீழே கிடந்த கணவனின் கன்னத்திலேயே உதைத்தார். ஒரு வழியாக நீண்ட போராட்டத்துக்குப் பின் அக்கம் பக்கத்தினர் குடும்பச் சண்டையை விலக்கி விட்டனர்.
இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட விஷால், தனது தாயாருடன் சென்று போலீசில் புகார் அளித்துள்ளார். மீரட்டில் கணவரை மனைவியே கொடூரமாக வெட்டிக் கொன்றது போன்று, தன்னையும் தனது மனைவி மற்றும் அவரின் குடும்பத்தினர் கொலை செய்யக் கூடும் என அச்சம் தெரிவித்துள்ளார். எனவே, தனது புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.
இது தொடர்பாக, போலீசார் இரு தரப்பினரிடையே தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாமியாரை முதியோர் இல்லத்திற்கு அனுப்பவதற்கு மறுத்த கணவரை, மனைவியே தனது குடும்பத்தினருடன் சேர்ந்து கொலைவெறித் தாக்குதல் நடத்திய சம்பவம் அப்பகுதியில் அதிர்வலையை ஏற்படுத்தியது.
April 07, 2025 9:19 AM IST
“மாமியாரை முதியோர் இல்லத்தில் விடு”.. மறுத்த கணவன் மீது பெண் வீட்டார் கொலைவெறி தாக்குதல்.. பகீர் வீடியோ!
