Last Updated:
மேற்கு வங்கத்தில் சட்டக் கல்லூரி மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரதில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.கள் இடையே மஹுவா மொய்த்ரா, கல்யாண் பானர்ஜி இடையே வார்த்தை மோதல் வெடித்துள்ளது.
மேற்கு வங்கம் மாநிலம், கஸ்பா பகுதியில் சட்டக் கல்லூரி இயங்கிவருகிறது. இந்தக் கல்லூரியில் படிக்கும் 24 வயது மாணவி ஒருவர், கல்லூரி வளாகத்திற்குள் வைத்தேயே வன்கொடுமை செய்யப்பட்டார். இது அம்மாநிலத்தில் மட்டுமின்றி இந்தியா முழுவதிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், இந்த விவகாரத்தில் கல்லூரி ஊழியர் உட்பட மூவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இந்தச் சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், அம்மாநில ஆளும் கட்சி எம்.பி. கல்யாண் பானர்ஜி, “ஒரு நண்பர் மற்றொரு நண்பரை பாலியல் வன்கொடுமை செய்தால், அவரின் பாதுகாப்பை எப்படி உறுதி செய்ய முடியும்? கல்லூரியில் போலீஸார் இருப்பார்களா? இது மாணவர்களால் மற்றொரு மாணவிக்கு நடந்த கொடுமை. பாதிக்கப்பட்டவரை யார் பாதுகாப்பார்கள்?
பெண்கள் யாருடன் வெளியே செல்கிறோம் என்பதை அறிந்திருக்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார். இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்த நிலையில், அதே கட்சியைச் சேர்ந்த மஹுவா மொய்த்ரா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கல்யாண் பானர்ஜியின் கருத்திற்கு பதில் அளித்த திரிணாமுல் காங்கிரஸ் தலைமை, கல்யாண் பானர்ஜியின் கருத்து அவரின் தனிப்பட்ட கருத்து எனத் தெரிவித்தது. இதற்கு பதில் அளித்த மஹுவா மொய்த்ரா, “இந்தியாவில் பெண் வெறுப்பு, கட்சி எல்லைகளுக்கு அப்பாற்பட்டது. திரிணாமுல் காங்கிரஸ் இக்கருத்தில் இருந்து விலகுவது என்பது, இந்த அருவெறுப்பான கருத்துகளை யார் சொன்னாலும் நாங்கள் கண்டிக்கிறோம் என்பது தான்” எனத் தெரிவித்தார்.
மஹுவா மொய்த்ராவின் இந்தக் கருத்திற்கு பதில் தெரிவித்துள்ள கல்யாண் பானர்ஜி, “மஹுவா தனது தேனிலவுக்குப் பிறகு இந்தியாவுக்கு திரும்பி வந்து என்னுடன் சண்டையிடத் தொடங்கியுள்ளார். அவர் என்னை பெண்ணுக்கு எதிரானவர் என்று குற்றம் சாட்டுகிறார். அவர் (மொய்த்ரா) ஒருவரின் 40 வருட திருமணத்தை முறித்து, 65 வயதுடைய நபரை மணந்தார். அந்தப் பெண்ணை அவர் காயப்படுத்தவில்லையா? அவர் தான் மிகப்பெரிய பெண் விரோதி” எனத் தெரிவித்துள்ளார்.
June 29, 2025 4:09 PM IST

