Last Updated:
மேற்குவங்க டார்ஜிலிங் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை, நிலச்சரிவு, வெள்ளம் காரணமாக 20 பேர் உயிரிழந்தனர்.
மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங் மாவட்டத்தில் பெய்த கனமழையால் நிலச்சரிவுகள் ஏற்பட்டு, பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. வீடுகள் தரைமட்டமாகி, சாலைகள் சேதமடைந்து, தொலைதூர கிராமங்கள் பலவும் தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில், குறைந்தது 20 பேர் உயிரிழந்தனர்.
மேற்கு வங்கத்தின் வடக்குப் பகுதியில் உள்ள பிரபல சுற்றுலா தலமான டார்ஜிலிங் மற்றும் கலிம்போங், கூச் பெஹார், ஜல்பைகுரி, அலிப் பூர்துவார் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை வெளுத்துவாங்கியது.
இதேபோல, மேற்கு வங்கத்தை ஒட்டியுள்ள அண்டை நாடான பூட்டானிலும் தொடர் மழை பெய்துவருவதால், அங்குள்ள குறிச்சு மற்றும் தலா அணைகள் நிரம்பி வழிகின்றன. அங்கிருந்து அதிகளவு தண்ணீர் திறக்கப்படுவதால், டீஸ்டா மற்றும் ஜல்தகா ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
துதியாவில் உள்ள பாலஸன் ஆற்றிலும் காட்டாற்று வெள்ளம் பாய்ந்ததில், வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன. கடும் வெள்ளத்தால் சிலிகுரி-டார்ஜிலிங் மாநில நெடுஞ்சாலையில் உள்ள இரும்பு பாலத்தின் தூண் சேதம் அடைந்ததால் போக்குவரத்து தடை செய்யப்பட்டது.
மேற்கு மிட்னாபூரில் உள்ள அணையில் பழுதுபார்க்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், நீர்மட்டம் திடீரென உயர்ந்ததால் வேறு வழியின்றி அணையில் இருந்து அதிகளவில் தண்ணீர் திறக்கப்பட்டது.
இதனால், ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் நிலையில், கரையோரப் பகுதிகளையும் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இதனிடையே, மேற்கு வங்கம் மற்றும் சிக்கிம் மாநிலங்களை இணைக்கும் முக்கிய சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்கும் பணியில் பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். டார்ஜிலிங் மாவட்டத்தில் நிலச்சரிவால் கட்டடம் இடிந்ததால், இடிபாடுகளில் சிக்கி 12 பேர் உயிரிழந்தனர். மேற்குவங்க மாநிலத்தில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20-ஆக அதிகரித்துள்ளது.
வெள்ளம் பாதித்த பகுதிகளை மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி இன்று பார்வையிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் உயிரிழப்புகளுக்கு இரங்கள் தெரிவித்துள்ளனர். மீட்பு நடவடிக்கைக்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
October 06, 2025 8:17 AM IST

