Last Updated:
பீகார் தேர்தலுக்கு முன், லாலு பிரசாத் யாதவ் தனது மகன் தேஜ் பிரதாப் யாதவை ஆறு ஆண்டுகளுக்கு கட்சியில் இருந்து நீக்கியுள்ளார்.
ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சியின் மூத்தத் தலைவர் லாலு பிரசாத் யாதவ் தனது மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவை கட்சியில் இருந்து ஆறு ஆண்டுகளுக்கு நீக்கியுள்ளார்.
பீகார் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சியின் மூத்த தலைவருமான லாலு பிரசாத் யாதவ்வின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ் முகநூல் பக்கத்தில் தான், அனுஷ்கா யாதவ் எனும் பெண்ணுடன் கடந்த 12 ஆண்டுகளாக காதிலிலும், உறவிலும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. ஏற்கனவே திருமணமான தேஜ் பிரதாப் யாதவ் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருந்ததும், அதனை வெட்ட வெளிச்சமாக அறிவித்ததும், பீகாரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
குறிப்பாக இந்த ஆண்டு இறுதியில் பீகார் மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. தற்போது, பாஜகவுடன் கூட்டணிக்கொண்டு நிதிஷ் குமார் அம்மாநிலத்தின் முதலமைச்சராக இருந்துவருகிறார். இந்தச் சூழலில் 2025 தேர்தலில் வென்று ஆட்சி அமைக்க ராஷ்ட்ரிய ஜனதாதளம் தீவிரமாக செயல்பட்டுவருகிறது.
இப்படியான அரசியல் கணக்குகள் இடையில், ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சியின் மூத்த தலைவர் லாலு பிரசாத் யாதவ்வின் மூத்த மகன் இப்படியான சர்ச்சையில் சிக்கியது பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, உடனடியாக அவர் கட்சியில் இருந்து ஆறு ஆண்டுகள் நீக்குவதாக அவரது தந்தை லாலு பிரசாத் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது, “மூத்த மகனின் செயல்பாடுகள், பொது நடத்தை மற்றும் பொறுப்பற்ற நடத்தை எங்கள் குடும்ப மதிப்புகள் மற்றும் மரபுகளுக்கு ஏற்றதாக இல்லை. நான் அவரை கட்சியில் இருந்தும் குடும்பத்தில் இருந்து நீக்குகிறேன். இனி அவருக்கு கட்சியிலும், குடும்பத்திலும் எந்தப் பங்கும் கிடையாது. அவர் ஆறு ஆண்டுகள் கட்சியில் இருந்து நீக்கப்படுகிறார்” எனத் தெரிவித்துள்ளார். அதேசமயம் தனது முகநூல் பக்கம் ஹேக் செய்யப்பட்டதாக தேஜ் பிரதாப் யாதவ் விளக்கம் கொடுத்துள்ளார்.
பீகாரின் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவரும், லாலு பிரசாத் யாதவ்வின் மற்றொரு மகனுமான தேஜஸ்வி யாதவ்வின் அண்ணன் தேஜ் பிரதாப் யாதவ் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சியின் தற்போதைய தலைவர் தேஜஸ்வி யாதவ், “இதுபோன்ற விஷயங்களை நாங்கள் பொறுத்துக்கொள்ள முடியாது. நாங்கள், பீகார் மக்களுக்காக அர்ப்பணிப்புடன் வேலை செய்கிறோம். அரசியல் வாழ்க்கையும் தனிப்பட்ட வாழ்க்கையும் வேறு. அவருக்குத் (தேஜ் பிரதாப் யாதவ்) தனது தனிப்பட்ட முடிவுகளை எடுக்க உரிமை உண்டு. ஊடகங்கள் மூலம்தான் நான் அதைப் பற்றி அறிந்தேன்” எனத் தெரிவித்துள்ளார்.
நெருங்கும் பீகார் தேர்தல்; பெண் சர்ச்சையில் சிக்கிய லாலு மகன்.. தேஜஸ்வி யாதவ் சொன்ன பளிச் பதில்

