Last Updated:
குணால் கம்ராவுக்கு ஏக்னாத் ஷிண்டேவை விமர்சித்த வழக்கில் மும்பை உயர்நீதிமன்றம் 16ஆம் தேதி வரை இடைக்கால நிவாரணம் வழங்கியது.
மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் ஏக்னாத் ஷிண்டேவை விமர்சித்த வழக்கில், நகைச்சுவை பேச்சாளர் குணால் கம்ராவுக்கு வரும் 16 ஆம் தேதி வரை இடைக்கால நிவாரணத்தை மும்பை உயர்நீதிமன்றம் அளித்துள்ளது.
கடந்த மாதம் மும்பையில் நடந்த நகைச்சுவை நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நகைச்சுவை பேச்சாளரான தமிழ்நாட்டைச் சேர்ந்த குணால் கம்ரா, ஏக்னாத் ஷிண்டேவை துரோகி என விமர்சித்தார். இதனால் ஆத்திரமடைந்த ஷிண்டேவின் ஆதரவாளர்கள் நகைச்சுவை நிகழ்ச்சி நடந்த அரங்கை அடித்து உடைத்து சூறையாடினர்.
இந்த விவகாரத்தில் மும்பை காவலர்கள் குணால் கம்ரா மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர். இந்த வழக்கில் குணால் கம்ராவுக்கு வரும் 17ஆம் தேதி வரை இடைக்கால முன் பிணையை சென்னை உயர்நீதிமன்றம் அளித்திருந்தது. மும்பையில் பதிவான பிற வழக்குகளில் மும்பை உயர்நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெறலாம் என்றும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
இதையும் படியுங்கள் : டாஸ்மாக் வழக்கு : தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் கண்டனம்
இதனிடையே தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி குணால் தரப்பில் மும்பை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் வரும் 16ஆம் தேதி வரை குணால் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று அறிவித்துள்ள நீதிமன்றம், இந்த வழக்கில் தொடர்புடைய எதிர்மனுதாரர்களும் பதில் அளிக்க நோட்டீஸ் அளித்து உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
April 08, 2025 4:29 PM IST

