‘நடைபயணம் என்ற போர்வையில் உல்லாச பயணம் மேற்கொண்டு வரும் பாஜக தலைவர் அண்ணாமலை, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிற வகையில் உண்மைக்கு புறம்பான, ஆதாரமற்ற அவதூறான கருத்துகளை கூறி வருகிறார்’ என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

சேலத்தில் மக்கள் பயணம் மேற்கொண்டுள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ‘’தமிழகத்தின் நிதிநிலை அதல பாதாளத்திற்கு சென்று விட்டதாகவும், தமிழகத்தின் ஒட்டுமொத்த கடன் தொகை அடுத்த 2 ஆண்டுகளில் 10 லட்சம் கோடியாக உயர்ந்து விடும்’’ என பேசினார்.
இது தொடர்பாக கே.எஸ்.அழகிரி தனது எக்ஸ் தளத்தில், ‘’நடைபயணம் என்ற போர்வையில் உல்லாச பயணம் மேற்கொண்டு வரும் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிற வகையில் உண்மைக்கு புறம்பான, ஆதாரமற்ற அவதூறான கருத்துகளை கூறி வருகிறார்.
தமிழகத்தின் நிதிநிலை அதல பாதாளத்திற்கு சென்று விட்டதாகவும், தமிழகத்தின் ஒட்டுமொத்த கடன் தொகை அடுத்த 2 ஆண்டுகளில் 10 லட்சம் கோடியாக உயர்ந்து விடும் என்று பேசியிருக்கிறார். தமது முதுகு தனக்கு தெரியாது என்பதால் இத்தகைய கருத்தை அவர் கூறியிருக்கிறார். இக்கருத்தை கூறுவதற்கு முன் ஒன்றிய பா.ஜ.க. அரசின் கடன் நிலைமை என்ன என்பது குறித்து அவர் அறிந்திருக்க வேண்டும்.

ஒன்றிய பா.ஜ.க. அரசின் மொத்த கடன் 31 மார்ச் 2023 நிலவரப்படி ரூபாய் 153 லட்சம் கோடியாக இருந்தது. இது வருகிற 31 மார்ச் 2024 இல் 169 லட்சம் கோடி ரூபாயாக 2023-24 நிதியாண்டில் உயர்ந்துவிடும் என்று செய்தி வெளிவந்துள்ளது. இதன்மூலம் ஒரே ஆண்டில் 16 லட்சம் கோடி கடன் உயர்ந்துவிடும் என்று கூறப்பட்டிருக்கிறது. இன்றைய கடனை ஆய்வு செய்கிற போது, மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு பதவி விலகுகிற போது, 31 மார்ச் 2014 அன்று இருந்த மொத்த கடன் ரூபாய் 58.6 லட்சம் கோடி. இது மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 52.2 சதவிகிதமாகும். ஆனால், இது 9 ஆண்டுகளில் 2023 இல் 174 சதவீதமாக அதிகரித்து ரூபாய் 155.6 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 57.1 சதவீதமாகும்.

நிர்மலா சீதாராமன்
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களின் திறமையற்ற பொருளாதார நிர்வாகத்தின் காரணமாகவே இத்தகைய கடன் சுமை ஏற்பட்டிருப்பதை அண்ணாமலையால் மறுக்க முடியுமா ? தமிழகத்தின் கடனைப் பற்றி பேசுகிற அண்ணாமலை, ஒன்றிய பா.ஜ.க. அரசின் 9 ஆண்டுகால கடன் சுமை 100 லட்சம் கோடி அதிகரித்திருப்பதைப் பற்றி என்ன பதில் கூறப் போகிறார்? இதற்கான விளக்கத்தை தருவாரா? தொலைக்காட்சி ஊடகங்கள் மைக்கை நீட்டினால் அற்ப விளம்பரத்திற்காக எத்தகைய அவதூறையும் பேசிவிடலாம் என்று அண்ணாமலை நினைத்தால் அதிலிருந்து அவர் தப்பிக்க முடியாது. மக்கள் மன்றத்தில் அவர் பதில் கூறியே ஆக வேண்டும்.
ஒன்றிய அரசுக்கு ரூபாய் 1 வரியாக வழங்கினால் 29 பைசா தான் திரும்பி வருகிறது என்று கூறியிருக்கிறார். இதற்கு நேரடியாக பதில் கூறாமல் நிர்மலா சீதாராமன் விதண்டாவாதங்களை பேசி வருகிறார். இதை தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள். இயற்கை பேரிடரினால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிற தமிழக மக்களின் துயரத்தில் எந்த பங்கையும் ஏற்றுக் கொள்ள மறுக்கிற ஒன்றிய பா.ஜ.க. அரசின் வஞ்சக, பாரபட்ச போக்கிற்கு தமிழ்நாட்டு மக்கள் உரிய பாடத்தை புகட்டுவார்கள்” என குறிப்பிட்டுள்ளார்.


அண்ணாமலையை அழகிரி தாக்கி பேசுவதும் அழகிரியை அண்ணாமலை தாக்கி பேசுவதும் அரசியல் ரீதியாக தொடர்ந்து வருகிறது இதற்கெல்லாம் நம்ம கமெண்ட் வேற போட வேண்டியது இருக்கு