தற்போது, திரையில் ஓடிக்கொண்டிருக்கும் மலையாள சினிமாவான ‘எம்புரான்’ படத்துக்கு, பி.ஜே.பி, ஆர்.எஸ்.எஸ் என்று காவிகள் தரப்பிலிருந்து கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. “கோத்ரா கலவரப் பின்னணியைக் காட்டியுள்ளனர்’ என்று பொங்கிக் கொண்டுள்ளனர். ஆனால், பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளின் வாழ்வாதாரமான முல்லைப்பெரியாறு அணை பற்றி, அந்தப் படத்தில் வேண்டுமென்றே விஷமப் பிரச்சாரம் செய்யப்பட்டிருப்பது பற்றி… காவிகளோ, கம்யூனிஸ்டுகளோ, கழகங்களோ, கதர்களோ, ஒருவரும் ஒருவார்த்தைகூட பேசவே இல்லை.
தமிழ்நாட்டை ஆண்டு கொண்டிருக்கும் ‘திராவிட மாடல்’ மூச்சுகூட விடவில்லை. இதனால், நொந்துபோய் கிடக்கின்றனர், லட்சோப லட்சமாக இருக்கும் முல்லைப்பெரியாறு பாசன விவசாயிகள்.
முல்லைப் பெரியாறு
மேற்குத் தொடர்ச்சி மலையில் உருவாகி மேற்கு நோக்கிப் பாயும் முல்லைப்பெரியாறு நீரை மலைகளுக்கு இடையில் தடுத்து அணைகட்டி, அங்கிருந்து சுரங்கப்பாதை வழியாக தமிழகத்துக்குத் தண்ணீர் கொண்டுவருவதற்காகக் கட்டப்பட்ட அணைதான்… முல்லைப் பெரியாறு.
1895-ம் ஆண்டில் அக்டோபர் 10-ம் தேதி கட்டிமுடிக்கப்பட்ட இந்த அணையை நம்பியே தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. பத்து லட்சத்துக்கும் மேற்பட்டவர்களின் வாழ்வாதாரமாகவும்… ஒரு கோடி மக்களின் நீராதாரமாகவும் இந்த அணை உள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் உறுதியான தீர்ப்பு!
கேரளாவில் 1976-ல் இடுக்கி அணை கட்டப்பட்டப் பிறகு, முல்லைப்பெரியாறு அணையை எப்படியாவது உடைத்தே ஆகவேண்டும் என்று கேரளக்காரர்கள் ஆரம்பித்து வைத்த உள்ளடி வேலைகள், இன்றுவரையிலும் பற்பல ரூபங்களில் தொடர்கின்றன. அணை பலவீனமாக உள்ளதாகக் கூறி 152 அடி நீர் தேக்கக்கூடிய அணையின் நீர்மட்ட உயரத்தை, 136 அடியாகக் குறைக்க வைத்தனர்.
