புதுடில்லி: கடந்த 11 ஆண்டுகளில் ஆம் ஆத்மிக்கு எதிராக 250 வழக்குகள் போடப்பட்டுள்ளதாக டில்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.
கட்சி நிறுவன நாள் தினத்தில், அரவிந்த் கெஜ்ரிவால் பேசியதாவது: பொய் வழக்குகளில் சிறையில் இருக்கும் மணீஷ் சிசோடியா, சஞ்சய் சிங் இல்லாத கட்சி நிறுவன நாள் நிகழ்ச்சியில் அவர்களை மிஸ் செய்கிறேன். பொய் வழக்குகளில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கடந்த 11 ஆண்டுகளில் ஆம் ஆத்மிக்கு எதிராக 250 வழக்குகள் போடப்பட்டுள்ளன.
இந்திய வரலாற்றில் ஆம் ஆத்மி கட்சி குறிவைக்கப்பட்ட அளவுக்கு வேறு எந்த அரசியல் கட்சியும் குறிவைக்கப்படவில்லை. அனைத்து விசாரணை அமைப்புகளும் ஆம் ஆத்மிக்கு எதிராக செயல்படுகிறது. ஆனால் அவர்கள் இன்று வரை எந்த ஆதாரத்தையும் கண்டுபிடிக்கவில்லை.
இது நமது நேர்மைக்கு கிடைத்த மிகப்பெரிய சான்றிதழ். மற்ற கட்சிகளின் தலைவர்களை பொய் வழக்குகள் மூலம் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர பாஜ.,வுக்கு தெரியும். ஆனால் ஆம் ஆத்மியை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் எப்படி கொண்டு வருவது என்று பாஜ., வுக்கு தெரியவில்லை. எங்கள் எம்.எல்.ஏ.க்கள் யாரும் பாஜ.,வுக்கு அடிமை ஆகவில்லை என்பது பெருமை அளிக்கிறது. இவ்வாறு கெஜ்ரிவால் பேசினார்.

