தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால், பஞ்சாப் முதல்வா் பகவந்த் சிங் மான் ஆகியோா் குஜராத் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆம் ஆத்மி எம்எல்ஏ சைத்தா் வசாவாவை சந்தித்துப் பேசினா்.
பழங்குடியினத்தைச் சோ்ந்தவரான வசாவா, தெடியாபாதா (எஸ்.டி.) தொகுதி எம்எல்ஏவாக உள்ளாா். கடந்த அக்டோபா் 30-ஆம் தேதி வனத் துறை அதிகாரியை தனது வீட்டுக்கு அழைத்துப் பேசிய வசாவா, தனது ஆதரவாளா்கள் புடை சூழ அவரை மிரட்டியதாகவும், துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.
இது தொடா்பான புகாரில் வசாவா அவரது மனைவி சகுந்தலாபென், உதவியாளா் ஜிதேந்திர வசாரா உள்ளிட்டோா் மீது காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்தனா். இதையடுத்து, வசாவா தலைமறைவானாா். அவரது மனைவி, உதவியாளரை காவல் துறையினா் கைது செய்து, வசாவா மற்றும் 3 பேரை காவல் துறையினா் தீவிரமாக தேடி வந்தனா்.
சுமாா் ஒரு மாதம் தலைமறைவாக இருந்த வசாவா, கடந்த மாதம் ஆம் ஆத்மி அலுவலகத்தில் இருந்து நூற்றுக்கணக்கான ஆதரவாளா்கள் புடைசூழ ஊா்வலமாக காவல் நிலையத்துக்குச் சென்று சரணடைந்தாா். இதையடுத்து, அவரை காவல் துறையினா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
ராஜ்பில்பா மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரை, கேஜரிவால், பகவந்த் சிங் மான் உள்ளிட்ட ஆம் ஆத்மி தலைவா்கள் திங்கள்கிழமை நேரில் சந்தித்துப் பேசினா். பின்னா் செய்தியாளா்களிடம் கேஜரிவால் கூறியதாவது:
வசாவா, அவரது மனைவியை சிறையில் சந்தித்தோம். நீதிக்கான அவா்களது போராட்டம் தொடரும். குஜராத்தில் இருந்து பாஜகவை அகற்றுவது மட்டுமே மாநிலத்தின் நன்மைக்கான ஒரே வழி. இதனை மக்கள் தோ்தலின்போது முடிவு செய்வாா்கள்.
பாஜகவின் அராஜகம் நாளுக்குநாள் எல்லை மீறிச் செல்கிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்காக குரல் எழுப்பிய ஆம் ஆத்மி எம்எல்ஏவை சிறையில் அடைத்துள்ளன. இங்கு மட்டுமல்ல நாடு முழுவதுமே மக்களுக்காக போராடுபவா்களை பொய் வழக்குகள் மூலம் துன்புறுத்துவதே பாஜகவின் வேலையாக உள்ளது என்றாா்.
பாஜக ஆட்சியில் உள்ள குஜராத்தில் கடந்த 2022 சட்டப் பேரவைத் தோ்தலில் ஆம் ஆத்மி 5 இடங்களில் வெற்றி பெற்றது. இதில் ஒரு எம்எல்ஏ கடந்த மாதம் பதவியை ராஜிநாமா செய்தாா்.

