Last Updated:
கர்நாடகா முதல்வர் சித்தராமையா ஹெலிகாப்டர் மற்றும் தனி விமான பயணங்களுக்காக ரூ. 32 கோடி செலவிட்டது விவாதமாகியுள்ளது. பாஜக தலைவர் ராஜீவ் சந்தரசேகர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா, குறுகிய இடைவெளி பயணத்திற்கும் கூட ஹெலிகாப்டர் உபயோகப்படுத்தியிருப்பதும், அதற்காக செய்யப்பட்ட செலவும் தற்போது வெளியாகி புருவங்களை உயர்த்தியுள்ளது.
முதல்வர் பயணத்திற்காக பயன்படுத்திய ஜெட் மற்றும் விமானங்களுக்கான செலவு என்ன என்பது குறித்து, கர்நாடகா சட்டமன்றத்தில், ஜெ.டி.எஸ். எம்.எல்.சி. டி.என். ஜவராயிகவுடா கேள்வி எழுப்பினார். இதற்கு முதல்வர் அலுவலகம் அந்த விவரங்களை இன்று சட்டமன்றத்தில் வெளியிட்டது.
சித்தராமையா தனது ஹெலிகாப்டர் பயணத்திற்கு மட்டும், 2023 – 2024 காலத்தில் ரூ. 12.65 கோடியும், 2024 – 2025 ஜனவரி 15ஆம் தேதி வரை ரூ. 19.35 கோடியும் செலவிட்டிருப்பது தெரியவந்திருக்கிறது.
இதையும் படியுங்கள் : மகா கும்பமேளா; ”1000 இந்துக்களை காணவில்லை.. பாஜக பதில் சொல்ல வேண்டும்” – அகிலேஷ் யாதவ்
மேலும், சித்தராமையா பெங்களூருவில் இருந்து அருகே இருக்கும் மைசூருக்கு செல்லக் கூட ஹெலிகாப்டர் பயன்படுத்தியிருப்பது தெரியவந்துள்ளது. பெங்களூருவில் இருந்து சாலை மார்க்கமாக சென்றாலே மைசூரை வெறும் 1.5 மணி நேரத்தில் சென்றடை முடியும். அதற்கும் அவர் ஹெலிகாப்டரை பயன்படுத்தியுள்ளார். இதற்காக அவர் ரூ. 10.85 லட்சம் வரை செலவு செய்திருப்பது தெரியவந்துள்ளது.
அதேபோல், டெல்லி, சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு செல்ல அவர் தனி விமானத்தை வாடகைக்கு எடுத்துச் சென்றிருப்பதும் தெரியவந்துள்ளது. உள்நாட்டு பயணத்திற்கு ஏராளமான விமானங்கள் இருக்கும்போது அவர் தனி விமானத்தை வாடகைக்கு எடுத்துப் பயணித்திருப்பதும் பேசுபொருளாக மாறியுள்ளது.
இந்நிலையில், முதல்வரின் விமானம் மற்றும் ஹெலிகாப்டர் பயண செலவு குறித்து விமர்சித்துள்ள பாஜக தலைவர் ராஜீவ் சந்தரசேகர், “வாவ் சித்தராமையா வாவ், ராகுல் காந்தியின் முன்னுதாரண மாற்றம், கர்நாடகா வளர்ச்சிக்கு பணமில்லை, விவசாயிகளுக்கு பணமில்லை, உள்கட்டமைப்புக்கு பணமில்லை, ஆனால் முதல்வரின் தனி விமானத்திற்கு இவ்வளவு செலவு” என தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
March 19, 2025 9:21 PM IST
“கர்நாடகா வளர்ச்சிக்கு பணம் இல்லை.. ஆனால், தனி விமானத்திற்கு இத்தனை கோடி” – சித்தராமையா மீது பாஜக விமர்சனம்

