இதையடுத்து இந்த தீ விபத்து குறித்து தீவிர விசாரணை நடத்த வேண்டும் என ஆகஸ்ட் 15, 2024 அன்று டி.ஜி.பி சங்கர் ஜிவால், தலைமை செயலாளர், உள்துறை செயலாளர் மற்றும் காவல் ஆணையருக்கு புகார் மனுவை கல்பனா நாயக் அனுப்பியிருந்தார்.
இப்படியான நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் ஏடிஜிபியாக இருந்த கல்பனா நாயக், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவிற்கு மாற்றப்பட்டிருக்கிறார். காவல்துறையின் முக்கியப் பொறுப்பில் இருக்கும் பெண் ஏடிஜிபியின் உயிருக்கே ஆபத்து ஏற்பட்டிருப்பதும், அவருக்கு நடந்த தீ விபத்து சம்பவத்தில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருப்பதும்தான் இப்போது அரசியல் சர்ச்சைகள் வெடிப்பதற்குக் காரணமாகியிருக்கிறது.

எதிர்க்கட்சித் தலைவர் அ.தி.மு.க எடப்பாடி பழனிச்சாமி, பா.ம.க நிறுவனர் ராமதாஸ், அண்ணாமலை உள்ளிட்டோர், “பெண் ஏடிஜிபி கல்பனா நாயக்கை படுகொலை செய்ய சதி நடந்ததாக கூறப்படுவது குறித்து சிபிஐ விசாரணைக்கும் தமிழக அரசு ஆணையிட வேண்டும்’ என்றும் ஆளுங்கட்சியான தி.மு.க அரசைக் குற்றம் சாட்டியும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
இந்தச் சர்ச்சைகளுக்கு இன்று (பிப் 3) பதிலளித்திருக்கும் டிஜிபி அலுவலகம், ‘ஏடிஜிபி கல்பானா நாயக் உயிருக்கு எந்தவித அச்சறுத்தலும், ஆபத்தும் இல்லை. அவரது அறையில் ஏற்பட்ட தீ விபத்து மின்கசிவால் ஏற்பட்டிருக்கிறது. அந்த தீ விபத்தை யாரேனும் ஏற்படுத்தியதற்கான முகாந்திரங்கள் ஏதுமில்லை” என்று விளக்கமளித்திருக்கிறது. சீருடைப் பணியாளர் தேர்வாணையம், “ஏடிஜிபி கல்பானா நாயக் புகாரில் உண்மையில்லை” என்று கூறியிருக்கிறது. கல்பனா நாயக், சீருடை பணியாளர் தேர்வாணைய முறைகேடுகளை அம்பலப்படுத்தியதால் தனக்குக் கொலை முயற்சி நடந்திருப்பதாகவும், தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதாகவும் உறுதியாகப் புகார் தெரிவித்து வருகிறார்.
திடீரென வெடித்திருக்கும் இந்த விவகாரம் தமிழகக் காவல்துறை வட்டாரத்தில் சர்ச்சைகளைக் கிளப்பி வருகிறது.
