’’சில்லுன்னு ஒரு காதல்’ படத்தில் வருவது போல நடிகர் சூர்யாவை எனக்கு ஒருநாள் கடனாகக் கொடுங்கள்’ என ஆர்வக் கோளாறில் ரசிகை ஒருவர் ஜோதிகாவை கேட்டிருக்கிறார். இதற்கு ஜோதிகா கொடுத்த ரிப்ளைதான் இப்போது இணையத்தில் செம வைரலாகிறது.

ஜோதிகா ரிப்ளை
நடிகை ஜோதிகா தனது சமூகவலைதளப் பக்கத்தில் ‘சைத்தான்’ பட வெற்றியைக் கொண்டாடும் விதமாக அந்தப் படப்பிடிப்பின் நினைவுகளை வீடியோவாகப் பகிர்ந்திருந்தார். இதில் தனது கணவர், நடிகர் சூர்யாவுடன் இருக்கும் புகைப்படங்களையும் ஜோதிகா பகிர்ந்திருந்தார். இதைப் பார்த்த சூர்யாவின் தீவிர ரசிகை ஒருவர், ‘’சில்லுன்னு ஒரு காதல்’ படத்தில் ஐஷூவுடன் ஒருநாள் சூர்யாவை அனுப்பி வைப்பது போல, எனக்கு ஒருநாள் கடன் கொடுப்பீர்களா? இந்த ஜென்டில்மேனுக்கு 15 வருடங்களாக ரசிகை நான்’ எனக் கேட்டிருக்கிறார்.
இதைப் பார்த்த ஜோதிகா, ‘கண்டிப்பாக அனுமதி இல்லை!’ என ஸ்ட்ரிக்டாக மறுத்திருக்கிறார். இதற்கு அந்த ரசிகை, ‘நீங்கள் ரிப்ளை செய்ததே மகிழ்ச்சி! சூர்யா எப்போதும் உங்களுடையவர்’ எனக் கூறி இருக்கிறார். இந்த கியூட்டான உரையாடல் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி இருக்கிறது.

சூர்யா-ஜோதிகா…
பல வருடங்களுக்குப் பிறகு ஜோதிகா பாலிவுட்டில் என்ட்ரி கொடுத்திருக்கும் படம் ‘சைத்தான்’. நடிகர்கள் அஜய்தேவ்கன், மாதவன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். இந்தப் படம் நூறு கோடி ரூபாய் வசூலைக் கடந்திருப்பதாகப் படக்குழு அறிவித்திருக்கிறது.
இந்தப் படம் குறித்து ஜோதிகா, ‘சில படங்கள் எனக்கு நல்ல பயணமாக அமைந்திருக்கிறது. அதில் ‘சைத்தான்’ படமும் ஒன்று. சந்தோஷம், நினைவுகள், நல்ல நண்பர்கள் என மகிழ்ச்சியான அனுபவம் இந்தப் படம் கொடுத்திருக்கிறது. மொத்த அணியினருக்கும் நன்றி’ எனக் கூறியுள்ளார் ஜோதிகா.
