அதிமுக அலுவலகம் சூறையாடப்பட்ட வழக்கின் நிலை குறித்த அறிக்கையை 4 வாரத்தில் தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2022 ஜூலை 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழு வானகரத்தில் நடைபெற்றது. அப்போது முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்துக்குச் சென்றார்.
அப்போது ஓ பன்னீர் செல்வம் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டு கட்சி அலுவலகம் சூறையாடப்பட்டது.
இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்து வருகிறது. இவ்வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில் இன்று (டிசம்பர் 12) நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகம் தரப்பில், “இந்த வழக்கு விசாரணையில் எந்தவித முன்னேற்றமும் இல்லை” என்று தெரிவிக்கப்பட்டது.
சிபிசிஐடி தரப்பில், “அதிமுக அலுவலகம் சூறையாடப்பட்டது தொடர்பாக ராயப்பேட்டை காவல் நிலையத்தில் பதிவான 4 வழக்குகளும் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. ஓ.பன்னீர் செல்வம் ,மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 40 பேர் முன்ஜாமீன் வாங்கியுள்ளனர். 116 ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. விசாரணை முறையாக நடநது வருகிறது. வழக்குகள் குறித்த நிலை அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும்” என்று வாதிடப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் விசாரித்த நீதிபதி, இந்த விவகாரத்தில் தேவைக்கு அதிகமாகத் தனது நேரத்தை வீணடித்திருப்பதாக அதிருப்தி தெரிவித்தார்.
மேலும் காவல்துறை தனது பணியைச் செய்யட்டும் என்று தெரிவித்த நீதிபதி, வழக்கின் நிலை குறித்த அறிக்கையை 4 வாரத்தில் தாக்கல் செய்ய சிபிசிஐடிக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.

