இந்திய ரயில்வே பயணிகளின் வசதிக்கு ஏற்ப புதிய ரயில்களை அவ்வப்போது அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில், சமீபத்தில் இந்தியாவின் அதிவேக ரயிலான வந்தே பாரத் ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டன, பல்வேறு மாநிலங்களில் மெட்ரோ ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், இந்தியாவின் நவீனமயமாக்கலை நோக்கிய ஒரு பெரிய மற்றும் முக்கிய படியாக, இந்தியா அடுத்ததாக புல்லட் ரயில்களை இயக்கத் தயாராகி வருகிறது. வரவிருக்கும் புல்லட் ரயில், இந்தியாவின் ரயில்வே உள்கட்டமைப்பை மேம்படுத்தவும், வேகம் மற்றும் செயல்திறனுக்கான புதிய நிலைகளை உருவாக்குவதற்கும் ஒரு புதிய வரவாக இருக்கும் என்பது இந்தியன் ரயில்வேயின் நோக்கமாக உள்ளது. இந்தியாவும், ஜப்பானும் மும்பை-அகமதாபாத் வழித்தடத்தில் புல்லட் ரயில்களுக்கான வடிவமைப்புகளை இறுதி செய்து வருகின்றன, இந்திய நிலைமைகளுக்கு ஏற்ப ஷிங்கன்சென் ரயில்கள் மாற்றி அமைக்கப்படுகின்றன.
அந்த வகையில், இந்தியாவிற்கு இரண்டு புல்லட் ரயில்களை ஜப்பான் பரிசாக வழங்குகிறது. ஜப்பானின் ஷின்கான்சென் தொழில்நுட்பத்தின் பாதுகாப்பு அமெரிக்காவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஜப்பான், தனது புகழ்பெற்ற இரண்டு ஷின்கான்சென் ரயில் பெட்டிகளை இந்தியாவிற்கு பரிசாக அளிக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இது நாட்டின் முதல் அதிவேக ரயில் திட்டத்திற்கு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக இருக்கும். கட்டுமானத்தில் உள்ள மும்பை-அகமதாபாத் அதிவேக ரயில் பாதையின் சோதனை மற்றும் ஆய்வுக்கு ஆதரவளிக்கும் வகையில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
E5 மற்றும் E3 தொடர் ரயில்கள் 2026ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவிற்கு டெலிவரி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. தற்போதைய எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை பயன்படுத்தும் ஏழு நகரங்களுடன் ஒப்பிடும்போது, இரண்டு முக்கிய நகரங்களுக்கு இடையேயான 500 கி.மீ. தூரத்திற்கு இந்த ரயிலால் வெறும் இரண்டு மணி நேரத்தில் கடக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜப்பானின் புல்லட் ரயில் அமைப்பின் அறிமுகம், போக்குவரத்து வலையமைப்பின் செயல்திறனுக்கு பங்களிப்பது மட்டுமல்லாமல், பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவது மற்றும் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் முயற்சியையும் ஊக்குவிக்கும்.
இதையும் படிக்க: ரயில்களில் பாதுகாப்பை மேம்படுத்த மத்திய அரசு புதிய நடவடிக்கை.. விபத்துகள் பெருமளவு குறைய வாய்ப்பு
ஜப்பானிய ஷின்கான்சென் தொழில்நுட்பம் அதன் ஈர்க்கக்கூடிய பாதுகாப்புக்கு பெயர் பெற்றது. அதன் 55 ஆண்டுகளுக்கும் மேலான செயல்பாட்டில், தொழில்நுட்பக் கோளாறால் எந்த ரயிலும் இதுவரை விபத்தில் சிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் தேசிய அதிவேக ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (NHSRCL) இன் கூற்றுப்படி, அதிவேக ரயில்களில், மேம்பட்ட விபத்து தவிர்ப்பு அமைப்பு மற்றும் அதிக வேகத்தில் செல்லும்போது அதனை கட்டுப்படுத்தும் வகையில், ஆட்டோமேட்டிக் பிரேக் சிஸ்டம் உள்ளிட்டவை பொருத்தப்படும்.
மேலும், இந்த ரயில், நில அதிர்வு அபாயம் உள்ள சில மண்டலங்களான கட்ச், கொய்னா-வார்னா பகுதி மற்றும் லத்தூர்-உஸ்மானாபாத் வழியாகச் செல்லும் என்பதால், ரயில் செல்லும் பாதையில் நிலநடுக்கத்தை முன்கூட்டியே கண்டறியும் வகையில், நிலநடுக்கத்தைக் கண்டறியும் அமைப்பும் உடன் பொருத்தப்பட்டிருக்கும் என்று கூறியுள்ளது.
இதையும் படிக்க: மக்களே உஷார்.. புழக்கத்தில் 500 ரூபாய் கள்ள நோட்டு.. மத்திய அரசு பகீர் எச்சரிக்கை.. எப்படி கண்டுபிடிப்பது?
மும்பை-அகமதாபாத் அதிவேக ரயில் பாதையின் சிவில் கட்டுமானம் குஜராத், மகாராஷ்டிரா மற்றும் தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி முழுவதும் 50% முடிக்கப்பட்டுள்ளது. இதில், குஜராத்தின் MAHSR வழித்தடங்களில் ரயில் வெல்டிங் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. மேலும், 60 கி.மீ. நீளத்திற்கு ஜப்பானிய தண்டவாளங்கள் நிறுவப்பட்டுள்ளன என்றும் அதிகாரப்பூர்வ அறிக்கைகள் தெரிவிக்கின்றன. BEML இந்த ரயில் பெட்டிகளை பெங்களூரு ரயில் பெட்டி தொழிற்சாலையில் வைத்து தயாரித்து, 2026க்குள் டெலிவரி செய்யவும் திட்டமிட்டுள்ளது. இந்த ரயில்கள் சேர் கார் அமைப்புடன், முழுமையான ஏசி வசதியைக் கொண்டிருக்கும். பிரெஞ்சு TGV மற்றும் ஜப்பானிய ஷிங்கன்சென் போன்ற அதிவேக ரயில்கள், உலகளவில் மணிக்கு 250 கி.மீ. வேகத்தில் இயக்கப்படுகின்றன.
April 22, 2025 1:21 PM IST

