கனடாவில் சொகுசு வீடு வாங்கவும், ஆடம்பர கார் வாங்கவும் பிரேயர் செய்தோம். ஆண்டவர்தான் அதற்கு அருள் பாலித்தார் என பால் தினகரனின் மனைவி இவாஞ்சலின் பேசி வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் கிறிஸ்தவர்கள் மத்தியிலும் கேலிக்குள்ளானது. இதுகுறித்து இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் அடுக்கடுக்கானக் கேள்விகளோடு நீண்ட பதிவு ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.
‘இயேசு அழைக்கிறார்’ நிறுவனர் மறைந்த டி.ஜி.எஸ்.தினகரன்-ஸ்டெல்லா தினகரனின் மகனும், காருண்யா பல்கலைக்கழக வேந்தருமான பால் தினகரனின் மனைவி இவாஞ்சலின். இவர் சமீபத்தில் வெளியிட்டிருந்த வீடியோவில், தங்கள் குடும்பம் கனடாவில் வீடு இல்லாமல் ஹோட்டலில் வாடகைக்கு தங்கி இருந்ததாகவும், பின்பு ஆண்டவர் இயேசு கிறிஸ்துவிடம் செய்த பிரேயர் காரணமாக கொஞ்ச நாட்களிலேயே லோன் எடுத்து அங்கு சொந்த வீடு வாங்கினோம் என கண்ணீர் ததும்ப பேசியுள்ளார்.
வீடு கொடுத்த கையோடு ஆண்டவர் தங்களுக்கு கார் கொடுத்தும் அருள் பாலித்தார் என ததும்பலோடு பேசி இருக்கிறார் இவாஞ்சலின். தேவதை தன் கனவில் வந்து என்ன கார் வேண்டும் எனக் கேட்டதாகவும், அடுத்த நாளே அந்த தேவதையிடம் கூறியதைப் போல தனது கணவர் கார் வாங்கிக் கொடுத்ததாகவும் இதற்கெல்லாம் காரணம் தாங்கள் செய்த பிரேயர்தான் எனவும் கூறியுள்ளார்.
உருக்கமாக கண்களில் கண்ணீரைத் தேக்கி வைத்தபடிக்கு பிண்ணனியில் மெல்லிய சோக இசையோடு இந்த வீடியோவை இவாஞ்சலின் பகிர்ந்திருக்க, இணையத்தில் இதை கேலிக்குள்ளாக்கினார்கள் நெட்டிசன்கள். பலரும் இந்த வீடியோவுக்கு கமெண்ட் செய்து வரும் நிலையில், இது குறித்து இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தன் முகநூல் பக்கத்தில் அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பியுள்ளார்.

ஜேம்ஸ் வசந்தன்.
அதில், ‘அண்மையில் நீங்கள் பேசியிருந்த ஒரு காணொலி என் கவனத்துக்கு வந்தது. இந்தக் காணொலி கிறிஸ்தவர் மட்டுமல்லாது பலரது கவனத்தையும் ஈர்த்தது. ஆனால் அது நேர்மறையான காரணத்துக்காக அல்ல; ஏளனத்துக்கும் நகைப்புக்கும். இந்தக் கேலியும் கிண்டலும் உங்களைப் பற்றியோ, உங்கள் குடும்பத்தைப் பற்றியோ தனிப்பட்ட விதத்தில் இருந்திருந்தால் என்னை ஒன்றும் பாதித்திருக்காது. உங்களுக்காக கொஞ்சம் பரிதாபப்பட்டுவிட்டு, என் வேலையைப் பார்த்திருப்பேன். ஆனால், அது ஆண்டவரையும், ஒட்டுமொத்த கிறிஸ்தவ சமூகத்தையும் தவறாகக் காட்டியதால் இந்தப் பகிர்வு.
உங்கள் குடும்பம் எவ்வளவு செல்வாக்கான குடும்பம் என்பது உலகத்துக்கே தெரியும். உங்கள் மாமனார் காலத்திலிருந்து இன்று உங்கள் பேரப்பிள்ளைகள் வரை அத்தனை பேரும் எப்படிப் படாபடோமான செல்வச் செழிப்பில் திளைக்கிறவர்கள் என்பது மறைக்கவே இயலாத உண்மை. உலகப் பணக்காரர் பட்டியலில் ஏன் உங்கள் குடும்பத்தின் பெயர் வருவதில்லை என்று நாங்கள் வியப்பதுண்டு!
உங்கள் குடும்பம் எதற்கு, எப்படி கனடா நாட்டுக்குச் சென்றது; அந்தக் குடியுரிமை எப்படி வாங்கினீர்கள்; பின் எதற்காக, எப்படி அமெரிக்காவுக்கு மாற்றலாகிச் சென்றீர்கள்; இன்று டெக்ஸாஸ் மாநிலத்தில் டல்லாஸ் நகரத்தில் எவ்வளவு பெரிய வீட்டை வாங்கிக் குடியிருக்கிறீர்கள்; வெளிநாட்டுக்கு குடிபெயர்ந்தச் செய்தியை எவ்வளவு ரகசியமாக பல ஆண்டுகள் ஒளித்துவைத்தீர்கள்; அவர்களுக்குத் தெரிந்தால் உங்கள் பலகோடி வருமானம் போய்விடும் என்பதால் அதிகப் படிப்போ, உலக அறிவோ இல்லாத பல இலட்ச பாமர விசுவாசிகளை எப்படி இங்கிருப்பது போலவே ஏமாற்றி வந்தீர்கள் என்பவைப் போன்ற பல தகவல்களை மேல் மட்டக் கிறிஸ்தவர் அறிவர்.

பால் தினகரன் – இவாஞ்சலின்
இந்தச் சூழலில் நீங்கள் “எப்படி ஒரு வீடு கூட இல்லாமல் ஓட்டலில் தங்கியிருந்தோம்” என்று நடிகையர் திலகம் அவர்கள் திறமையை மிஞ்சும் விதமாகக் குரலை தாழ்த்தி, உதடுகள் துடிக்க, வரும் கண்ணீரை அடக்க முயல்வது போலெல்லாம் ஒரு சாகஸம் செய்திருக்கிறீர்கள்! ஒரு வீடு இல்லாமல் இத்தனை குடும்ப உறுப்பினர்களையும் அழைத்துக்கொண்டு போய் கனடா நாட்டில் ஒரு நட்சத்திர விடுதியில் நாட்கணக்கில் தங்கக்கூடியவருக்கு எவ்வளவு பண வலிமை இருக்கும் என்று கொஞ்சம் அறிவு உள்ளவன் கூட யோசிப்பான் என்று உங்களுக்குத் தோணலையா இவ்வளவு அப்பட்டமாகப் பொய் பேசினால் அசிங்கமாகி விடுமே என்றுகூட உங்களால் சிந்திக்க முடியலையா?
எதற்காக இந்தப் பொய் நாடகம்? வீடு வாங்கிய கதையும், கார் வாங்கிய கதையும், இந்த அம்மா விடுற கதைகளையும் கேட்கக் கேட்கக் கொதிக்கிறது என்று பல கிறிஸ்தவ விசுவாசிகள் புலம்புகிறார்கள். தமிழ்க் கிறிஸ்தவச் சமூகமே அவமானத்தில் குறுகி நிற்கிறது.
உங்கள் குடும்பத்தின் உண்மையான பின்னணியை அக்குவேறு ஆணிவேறாகப் பட்டியலிடக் காத்திருக்கின்றனர் பலர். அது கிறிஸ்துவையும், கிறிஸ்தவத்தையும் மட்டுப்படுத்திவிடும் என்கிற ஒரே காரணத்துக்காக அமைதி காக்கின்றனர். கிறிஸ்தவத்தை கேலிக்கூத்தாக்க முயல்கிற பல கோமாளிகளின் கூட்டத்திற்கு தலைமை தாங்க உங்களுக்கு எல்லாத் தகுதியும் இருக்கிறது.
மூத்த தினகரன் ஐயா தொடங்கிய அந்த நல்ல பணியை, உங்களுக்கென்று கொடுக்கப்பட்டிருக்கிற ஊழியத்தை கொஞ்சமேனும் உண்மையுடனும், மனச்சான்றுடனும் செய்ய முற்படுங்கள். பலர் இன்னமும் உங்களை நம்புகிறார்கள். அவர்களைப் பார்த்து பரிதாபப்படுவதா, உங்களை நினைத்து வேதனைப்படுவதா என்று புரியவில்லை!’ எனக் கூறியுள்ளார்.

இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் ஏகப்பட்ட கேள்விகளை கேட்டுள்ளார் ஆனால் அதற்கான பதில் ஒன்று கூட ஜேம்ஸ் வசந்தனுக்கு தெரியாது கேள்வி யார் வேண்டுமானாலும் கேட்கலாம் என்பது இல்லை பதில் தெரிந்தவர்களை கேள்வி கேட்க வேண்டும் அதற்கு பெயர் தான் கேள்வி பதில் தெரியாமல் கேட்டால் அதற்கு பெயர் சந்தேகம் உதாரணத்திற்கு வகுப்பு மாணவனை டீச்சர் கேள்வி கேட்டால் அது கேள்வி ஏன் என்றால் டீச்சருக்கு அதற்குண்டான பதில் தெரியும் அதே சமயம் மாணவன் டீச்சரை கேள்வி கேட்டால் அது சந்தேகம் ஏனென்றால் மாணவனுக்கு அந்த கேள்விக்கான பதில் தெரியாது டீச்சரை கேட்டு தெரிந்து கொள்கிறான் முதலில் கேள்விக்கும் சந்தேகத்திற்கும் இடையேயான வித்தியாசத்தை இந்த ஜேம்ஸ் வசந்த் புரிந்து கொள்ள வேண்டும். ஜேம்ஸ் வசந்தன் ஏதோ கடிப்பில் பேசுகிறார் இவாஞ்சலின் கடவுளை பிரேயர் செய்தேன் அவர் இதையெல்லாம் வாங்கி தந்தார் என்று கூறியுள்ளார் இதில் ஒன்றும் தவறு கிடையாது நான் கூட நான் கும்பிடும் மாங்காடு காமாட்சி அம்மன் தான் எனக்கு செல்போன் பைக் வீடு உட்பட அனைத்து பொருட்களையும் தந்துள்ளார் மக்கள் ஆணையம் மாத புலனாய்வு பத்திரிகையில் சேர்த்து விட்டுள்ளார் என்று சொல்கிறேன் இதில் என்ன தவறு. மொத்தத்தில் ஜேம்ஸ் வசந்தன் அவர்களின் வளர்ச்சியை பார்த்து கடுப்பில் புலம்புகிறார்