புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை காந்தி சிலை அருகே அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி `மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்” என்ற அடிப்படையில் பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்தார்.
கந்தர்வகோட்டைக்கு வந்த எடப்பாடி பழனிச்சாமிக்கு அ.தி.மு.க-வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். முன்னதாக, வெள்ளை முனியன் கோயில் பகுதியில் டிராக்டர் மூலம் எடப்பாடி பழனிச்சாமிக்கு வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில், எடப்பாடி பழனிச்சாமி டிராக்டரில் ஏறி அமர்ந்து சிறிது தூரம் டிராக்டரை ஓட்டிச் சென்றார்.
பின்னர் டிராக்டரை விட்டு இறங்கி மீண்டும் பிரசார பேருந்தில் பயணித்து கந்தர்வக்கோட்டை காந்தி சிலைக்கு வருகை தந்தார்.
எடப்பாடி பழனிச்சாமி பேசும் போது அவர் அணிந்திருந்த பச்சைத் துண்டு காற்றில் வேகமாக பறந்ததால் எரிச்சல் அடைந்த எடப்பாடி பழனிச்சாமி உடனடியாக தோளில் இருந்த துண்டை எடுத்து உதவியாளரிடம் கொடுத்தார்.
மேலும், எடப்பாடி பழனிச்சாமி உரைத்தொடங்கிய சிறிது நேரத்தில் சாரல் மழை பெய்த நிலையில், சாரல் மழையிலும் பேசினார். அவருக்கு, ஆட்டுக்குட்டியும் பரிசாக வழங்கப்பட்டது.

கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, “கந்தர்வகோட்டை தொகுதி விவசாயிகள் நிறைந்த தொகுதி. விவசாய தொழிலாளர்கள் நிறைந்த பகுதி. நிறைய திட்டங்களை அதிமுக ஆட்சியில் கொண்டு வந்து நிறைவேற்றினோம்.
இந்த பூமி செல்வம் செழிப்பாக பசுமையாக எங்கே பார்த்தாலும் விளைநிலங்களில் கரும்பு, மஞ்சள், வாழை செழித்து வர நானே நேரடியாக வந்து காவிரி குண்டாறு இணைப்பு திட்டத்தை தொடக்கி வைத்தேன்.
முதற்கட்டமாக, 700 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தேன். தற்போதுள்ள ஆட்சியாளர்கள் தற்பொழுது அந்தத் திட்டத்தை முடக்கி வைத்துள்ளனர். அந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டிருந்தால் குளங்கள் அனைத்தும் நிறைந்திருக்கும். தண்ணீர் பிரச்னை நீங்கியிருக்கும்.
விவசாயிகளுக்கு விரோதமாக ஆட்சி நடத்துபவர்கள் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக முடக்கி வைத்துள்ள இந்த திட்டம், அதிமுக ஆட்சி மலர்ந்தவுடன் நிறைவேற்றப்படும்.
