Last Updated:
தெலுங்கானா மாநிலத்தில், மாட்டு மூளையுடன் வகுப்பறைக்கு வந்த அறிவியல் ஆசிரியர் காசீம், பாஜக மற்றும் இந்து அமைப்பினரின் எதிர்ப்பால் இடைநீக்கம் செய்யப்பட்டார்.
தெலுங்கானா மாநிலம், விகாராபாத் மாவட்டத்தில் உள்ள தந்தூர் தொகுதியில், அரசு உயர்நிலை பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில், காசீம் என்பவர் அறிவியல் பாட ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
இவர் அந்தப் பள்ளியில் படிக்கும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மனித மூளை குறித்து பாடம் எடுக்க, கையில் மாட்டு மூளையுடன் வந்துள்ளார். இதற்கு அந்த வகுப்பில் இருந்த சில மாணவர்கள் ஆட்சேபனை தெரிவித்துள்ளனர். இருந்தாலும், அதனை கருத்தில் கொள்ளாமல், ஆசிரியர் பாடம் எடுத்ததாக சொல்லப்படுகிறது. பின்னர் இது தொடர்பான புகைப்படம் வாட்ஸ்அப் குழுக்களில் பகிரப்பட்டுள்ளது.
அது வைரலானதைத் தொடர்ந்து, பாஜகவினரும், இந்து அமைப்பினரும், அந்தப் பள்ளியின் வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், உடனடியாக அறிவியல் ஆசிரியரை இடைநீக்கம் செய்ய வேண்டும், எப்படி கல்வி நிலையத்திற்குள் இதுபோல் செயல்படலாம், பாடம் கற்பிக்க 3டி தொழில்நுட்பங்கள் எல்லாம் இருக்கும்போது, இதனை எப்படி அனுமதிக்கலாம் எனத் தெரிவித்தனர். மேலும் இதில், மத உணர்வுகள் இருப்பதாகவும் கூறி அவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
ஆர்ப்பாட்டம் நடப்பது குறித்து அறிந்த காவல்துறையினர் உடனடியாக அந்தப் பள்ளிக்கு விரைந்தனர். பின்னர், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறியதை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். தற்போது அந்த ஆசிரியர் பள்ளியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும், காவல்துறையினர் இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
June 27, 2025 3:19 PM IST

