“இப்போ நீங்க என் ஃப்ரண்ட் ஆயிட்டீங்க தானே? கைக் கொடுங்க ப்ரோ… உங்ளோட ஓ.கே. ஓ.கே படத்துல வர்ர மாதிரி நான் ஏதாவது போலீஸ்கிட்ட மாட்டிக்கிட்டு உங்ககிட்ட ஹெல்ப் கேட்டா பண்ணுவீங்களா?” என ஓர் இன்டர்வியூவில் விளையாட்டாக யூடியூபர் இர்ஃபான், உதயநிதி ஸ்டாலினிடம் கேட்பார். அந்த விளையாட்டு கேள்விக்கான விடையைத்தான் இன்றைய தி.மு.க அரசு இர்ஃபானை காப்பாற்றுவதன் மூலம் சொல்லிக்கொண்டிருக்கிறதோ என அச்சம்கொள்ள வைக்கிறது என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
சோசியல் மீடியா பிரபலமான யூடியூபர் இர்ஃபான் சர்ச்சைக்குரிய வீடியோக்களை தனது யூ-டியூப் சேனலில் வெளியிடுவதும், பின்னர் சட்டரீதியிலான குற்றச்சாட்டுகள் எழ அதை நீக்குவதும், இதை தமிழக அரசு கண்டிப்பதுபோல கண்டித்து பெரிய அளவில் நடவடிக்கை எடுக்காமல் விடுவதும் தொடர்கதையாக நடந்துகொண்டிருக்கிறது. அந்த வரிசையில்தான், இர்ஃபான் தனது குழந்தையின் தொப்புள்கொடியை கட் செய்து வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் முதலில் `பாய்ந்து நடவடிக்கை எடுப்போம், மன்னிக்கமாட்டோம்’ என சூளுரைத்த மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தற்போது `இதென்ன கொலைக்குற்றமா?’ என மழுப்பலாக பின்வாங்கியிருக்கிறார்.
கடந்த மாதம் யூடியூபர் இர்ஃபான் தனது மனைவி ஆசிஃபாவின் பிரசவத்திற்காக சோழிங்கநல்லூரில் உள்ள ஓர் தனியார் மருத்துமனையில் அனுமதித்திருந்தார். அந்த நிலையில், பிரசவ நேரத்தின்போது நேரடியாக வீடியோ கேமராவுடன் பிரசவ அறைக்குச் சென்ற இர்ஃபான், மனைவியை அட்மிட் செய்தது, சிகிச்சைக்கு அழைத்துச் செல்வது தொடங்கி குழந்தை பிறப்பு, குழந்தையின் தொப்புள்கொடியை பாதுகாப்பற்ற முறையில் தானே கத்தரிகோலால் கட் செய்வது, செவிலியர்கள் கிளீன் செய்தபிறகு குழந்தையை தூக்கிக் கொஞ்சுவது என எல்லாவற்றையும் வீடியோக பதிவு செய்து தனது irfan views யூடியூப் சேனலில் பதிவிட்டார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்கள், செய்தி சேனல்களில் சர்ச்சையாக, விவகாரம் பெரிதாகியிருக்கிறது. `உரிய பயிற்சி-அனுபவம் இல்லாமல் கத்தரிக்கோலால் தாய்-சேயின் தொப்புள்கொடியை வெட்டியது தவறு; இதை சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவர்கள் அனுமதித்தது மேலும் தவறு; அதை வியூஸ்களுக்காக வீடியோ எடுத்து யூடியூப் சேனலில் வெளியிட்டது மிகத் தவறான முன்னுதாரணம்’ என மருத்துவர்களே கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, தமிழ்நாடு மருத்துவத் துறை சர்ச்சைக்குரிய வீடியோவை நீக்க வேண்டும் என யூடியூப் நிறுவனத்திற்கு கடிதம் எழுதியது.

தொடர்ந்து, மருத்துவப்பணிகள் இணை இயக்குநர் இளங்கோவன், `உரிய பயிற்சியின்றி மருத்துவ உபகரணங்களை பயன்படுத்திய இர்ஃபான் மீதும், அவரை பிரசவ அறைக்கு அனுமதித்த டாக்டர் நிவேதிதா மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் புகாரளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் டாக்டர் நிவேதிதா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும், இர்ஃபானுக்கும் சோழிங்கநல்லூரில் இருக்கும் தனியார் மருத்துவமனைக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதைத்தொடர்ந்து, அரசுக்கு அழுத்தம் அதிகரிக்க அதிகரிக்க, இர்ஃபானின் மனைவிக்கு பிரசவம் பார்த்த சோழிங்கநல்லூர் தனியார் மருத்துவமனைக்கு ரூ.50,000 அபராதம் விதித்ததுடன், 10 நாள்களுக்கு மருத்துவமனை செயல்படத் தடையும் விதித்து உத்தரவிட்டது தமிழ்நாடு மருத்துவத்துறை.
அந்த நிலையில், “இர்ஃபானின் மனைவிக்கு பிரசவம் பார்த்த மருத்துவர் நிவேதிதா, சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனை மீதெல்லாம் கடுமையான நடவடிக்கை எடுத்திருக்கும் தமிழ்நாடு அரசு, இந்த பிரச்னைக்கு மூலக் காரணமான இர்ஃபான் மீது மட்டும் ஏன் இன்னமும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை; தி.மு.க தலைவர்களுக்கு இர்ஃபான் நெருக்கமானவர் என்பதால் தமிழக அரசு அவரை பாதுகாக்க நினைக்கிறதா?” எனப் பல்வேறு தரப்பினரும் கடுமையாக குற்றம்சாட்டி, கேள்வி எழுப்பினர்.

மா.சு முதல் பேட்டி – `இர்ஃபான் மன்னிப்பு கேட்டாலும், அவரை விடமாட்டோம்!’
அதையடுத்து, பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதிலளித்த மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “இர்ஃபான் தன்னுடைய குழந்தையின் தொப்புள் கொடியை தானே அறுத்திருக்கிறார். அதை சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனை மருத்துவர்களும் அனுமதித்திருக்கிறார்கள். இது கண்டிக்கத்தக்க செயல். அறுவை சிகிச்சை நடக்கும் அறைக்குள் மருத்துவர் அல்லாத ஒருவர் சென்று, தொப்புள் கொடியை துண்டித்திருப்பதென்பது National Medical Commission Act 2021, பிரிவு 34, செக்சன் 1,2-படி மீறுவதாகும். மருத்துவச் சட்ட விதிகளை மீறியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க நோட்டீஸ் கொடுத்திருக்கிறோம். செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் அவர் மீது நடவடிக்கை எடுக்க டி.எம்.எஸ் சார்பில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.

அவர் மட்டுமல்லாமல் அவரை மருத்துவமனைக்குள் அனுமதித்த பெண் மருத்துவர் நிவேதிதா, தனியார் மருத்துவமனை மீதும் நடவடிக்கை எடுக்க புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. மேலும், நிவேதிதா மீது மருத்துவ பயிற்சிக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் மருத்துவ கவுன்சிலில் நோட்டீஸ் அளித்திருக்கிறோம். சட்ட ரீதியாகவும் துறை ரீதியாகவும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இர்ஃபான் மீது நடவடிக்கை எடுப்பதில் அரசியல் பின்புலம் இல்லை. தவறு செய்தவர்களை இந்த அரசு நிச்சயம் தப்ப விடாது. இந்தமுறை இர்ஃபான் மன்னிப்பு கேட்டாலும், அவரை விடமாட்டோம்!” என உறுதிபடத் தெரிவித்திருந்தார்.
மா.சு 2-வது பேட்டி: – `அதிகபட்சமான நடவடிக்கை எடுக்கப்படும்!’
அதன்பின்னரும் விவகாரம் ஓயாமல் சர்ச்சைக்குள்ளாக, பத்திரிகையாளர்கள் கேள்விக்கு பதிலளித்த மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “இர்ஃபானுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது. தற்போது இர்ஃபான் வெளிநாட்டில் இருக்கிறார். வெளிநாட்டிலிருந்து இங்கு வந்ததும் அவரிடமிருந்து பதில் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் சம்பந்தப்பட்ட மருத்துவமனை மீதும், சம்பந்தப்பட்ட யூடியூபர் மீதும் டி.எம்.எஸ் சார்பில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. அதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கைகளை காவல்துறையினர் செய்வார்கள். இந்த விவகாரத்தில் கால தாமதம் எதுவும் நடக்கவில்லை. துறைசார்ந்த நடவடிக்கை உடனடியாக எடுக்கப்படிருக்கிறது. அதேபோல, யூடியூபர் இர்ஃபான் மீதும் துறை ரீதியான, சட்டப்படியான இரண்டு நடவடிக்கைகளும் தொடரும்! அதிகபட்சமான நடவடிக்கை என்னவோ அதை எடுக்க இந்த அரசு வலியுறுத்தும்!” எனப் பதிலளித்திருக்கிறார்.

மா.சு 3-வது `பல்டி’ பேட்டி: – `இதென்ன பெரிய விஷயமா? இல்ல கொலைக்குற்றமா?’
இந்த நிலையில், இர்ஃபான் வெளிநாட்டிலிருந்து தமிழ்நாட்டுக்கு வந்து விட்டார். தொடர்ந்து, தனது யூடியூபில் விடியோ பதிவிட்டுக்கொண்டிருக்கிறார். மிகமுக்கியமாக திருமணம் உள்ளிட்ட பொது நிகழ்ச்சிகளிலும் வழக்கம்போல கலந்துகொண்டு வருகிறார். ஆனால், அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொன்னதைப் போல, இர்ஃபான் மீது அதிகபட்சமான நடவடிக்கை கூட அல்ல, குறைந்த பட்ச நடவடிக்கை கூட மருத்துவத் துறையால் எடுக்கப்பட வில்லை என மீண்டும் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த நிலையில், இர்ஃபான் மீது இன்னமும் நடவடிக்கை எடுக்காதது ஏன்? என பத்திரிகையாளர்கள், அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் கேள்வி எழுப்ப, அதற்கு பதிலளித்த அமைச்சர், “இர்ஃபானுக்கு வெறும் நோட்டீஸ்தான் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே சம்மந்தப்பட்ட மருத்துவமனை மீது நடவடிக்கை எடுத்திருக்கிறோம். ரூ.50,000 ஃபைன் போட்டோம், 10 நாள் சேவையை முடக்கி வைத்தோம். இர்ஃபான் செய்தது ஒன்றும் கொலைக்குற்றம் அல்ல! அவருக்கு நோட்டீஸ் கொடுத்திருக்கிறோம். இது ஒரு பெரிய விஷயமா?” என்று எதிர்கேள்வி கேட்டுவிட்டு மேற்கொண்டு பேசவிடாமல் வேகமாக எழுந்து நடந்தார்.

ஏற்கெனவே இதேபோல, இர்ஃபான் தனது மனைவி ஆலியா கர்ப்பம் தரித்திருந்தபோது, வயிற்றிலிருக்கும் சிசு ஆண் குழந்தையா அல்லது பெண் குழந்தையா என்று கண்டறியும் பரிசோதனை நடத்தி, அந்த பரிசோதனையின் முடிவை வெளியிடுவதற்காக ஒரு விழாவே ஏற்பாடு செய்து, அதை தனது யூடியூப் சேனலில் வெளியிட்டார். இந்தியாவைப் பொறுத்தவரையில் கருவிலிருக்கும் குழந்தையின் சிசுவின் பாலினத்தை ஆணா? பெண்ணா? என்று கண்டறிவது சட்டப்படி குற்றம். அதன்படி, இர்ஃபான் செய்த குற்றத்திற்கு பிரிவு 25-ன் கீழ் குறைந்தபட்சம் மூன்று மாத சிறைத் தண்டனையும் 1,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், சாதாரண மன்னிப்பு கடிதத்தை ஏற்றுக்கொண்டு அவரை தமிழ்நாடு மருத்துவத்துறை விட்டுவிட்டது. தற்போது, மன்னிப்பு கேட்டாலும் விடமாட்டோம் என்று சொல்லிவிட்டு, மீண்டும் அதே தவற்றை வழக்கம் போல செய்திருக்கிறது மருத்துவத்துறை!
`சட்டம் தன் கடமையை சரியாகச் செய்வதெல்லாம் எளிய மக்களிடம் மட்டும்தான்’ என்பதை மீண்டும் ஒருமுறை இர்ஃபான் சம்பவம் உணர்த்துகின்றது.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…
https://bit.ly/UlagaiMaatriyaThalaivargal

