இந்த நிலையில்தான், ஈராக் பெண்களின் திருமண வயதை 18-ல் இருந்து 9-ஆக குறைப்பதற்கான சட்டத்திருத்தம் செய்வதற்கு அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. இந்த புதிய சட்டவிதிகளின்படி, ஷியா பிரிவு முஸ்லீம் குடும்பங்களில் இருக்கிற பெண்களுக்கு திருமண வயது வரம்பு 9 வயது என்றும், சுன்னி பிரிவு முஸ்லீம் குடும்பங்களில் இருக்கிற பெண்களுக்கு திருமண வயது வரம்பு 15 வயது என்றும், மதத்தின் பிரிவைச் சார்ந்து நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
1950 முதல் நடைமுறையில் இருந்த ‘பெண்ணின் திருமண வயது வரம்பு 18’ என்ற சட்டத்தையும் நீக்கியுள்ளது. இதனை எதிர்த்து, ‘இளம்பெண்கள் கல்வி கற்க முடியாத நிலை வரும்; திருமணம் என்ற பெயரில் இளம்பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள் அதிகரிக்கும்’ என்று மனித உரிமை ஆர்வலர்களும், பெண்ணுரிமை ஆர்வலர்களும் குரல் எழுப்பி வருகிறார்கள்.

பாராளுமன்ற சட்டக்குழுவின் உறுப்பினர்களில் ஆரம்பித்து வழக்கறிஞர்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் இந்தச் சட்டத்தைக் கண்டித்து தங்கள் கருத்துகளை பதிவு செய்து வருகிறார்கள். திருமணம், விவாகரத்து மற்றும் குழந்தை பராமரிப்பு குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் மத அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக இந்தப் புதிய சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
