ஏமனில் தன்னுடைய நண்பரும், தொழில் ரீதியான கூட்டாளியாகவும் இருந்த தலால் அப்தோ மஹ்தி என்பவரின் கொலை வழக்கில், கேரள செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு நாளை (ஜூலை 16) நிறைவேற்றப்பட இருந்த, மரண தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.
கேரளாவின் பாலக்காட்டைச் சேர்ந்தவர், நிமிஷா பிரியா. தற்போது 35 வயதாகும் இவர், தொடுபுழாவைச் சேர்ந்த டாமி தாமஸ் என்பவரை திருமணம் செய்தார். அவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது. டோமி தாமஸ் தனது மகளுடன் தற்போது கேரளாவில் வசிக்கிறார்.

ஏமனில் நிமிஷாவின், தொழில் ரீதியான கூட்டாளியாக இருந்த தலால் அப்தோ மஹ்தி என்பவர் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் தன்னைக் கொடுமைப்படுத்தியதாகக் நிமிஷா தரப்பில் கூறப்படுகிறது. மஹ்தியிடமிருந்து தப்பிப்பதற்காக, 2017 ஜூலை 25-ம் தேதி அவருக்கு மயக்க மருந்து கொடுத்துள்ளார் நிமிஷா. மயக்க மருந்து ஓவர் டோஸ் ஆனதால் தலால் அப்துல் மஹ்தி மரணமடைந்ததாக கூறப்படுகிறது.
இந்த வழக்கில் 2020-ல் நிமிஷா பிரியாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. தன்னை கொடுமைப்படுத்தியதால்தான் கொலை செய்ததாக நிமிஷா பிரியா தரப்பு வழக்கறிஞர் வாதிட்டும், அதை ஏற்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.
