4. உங்களது போராட்டத்தை வலுப்பெறச் செய்வதற்காக பாதிக்கப்படக்கூடிய மாநிலங்களை ஒன்றிணைக்கும் முயற்சியை மேற்கொண்டீர்கள். அவர்களின் பதில்கள் உங்களுக்கு நிறைவாக இருந்ததா?
தி.மு.க. எப்போதுமே மாநில உரிமைகளுக்கான குரலையும், சமூகநீதிக்கான முழக்கத்தையும், மொழி சமத்துவத்தையும் முன்னெடுக்கின்ற இயக்கம். பேரறிஞர் அண்ணா காலத்திலும், தலைவர் கலைஞர் காலத்திலும் இத்தகைய முயற்சிகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. அவர்களின் வழியில்தான், தொகுதி மறுவரையறை செய்யப்படுவதில் உள்ள அநியாயத்தை முன்னிறுத்தி, தி.மு.க. முதல் குரல் கொடுத்தது. தமிழ்நாட்டில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை அரசின் சார்பில் நடத்தி, பிரதான எதிர்க்கட்சி உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளின் முழுமையான ஆதரவைப் பெற்றோம். அதன் தொடர்ச்சியாக கூட்டு நடவடிக்கைக்குழு கூட்டம் மார்ச் 22 அன்று சென்னையில் கூட்டப்பட்டு 3 முதலமைச்சர்கள், 2 துணை முதலமைச்சர்கள், முன்னாள் முதலமைச்சர் உள்பட 8 மாநிலங்களின் பங்கேற்புடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இதற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் என் நன்றி. இது முதல் கட்ட வெற்றி. போராட்டம் தொடரும்.
