புதுடில்லி: ‛‛தேசிய கல்விக் கொள்கையை வடிவமைக்க முடிவு செய்ததற்காக பிரதமர் மோடி தலைமையிலான அரசை நான் பாராட்டுகிறேன். இது ஒரு சிறந்த யோசனை, சரியான திட்டம்” என இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி பாராட்டியுள்ளார்.
மத்திய பா.ஜ., அரசு கொண்டு வந்த புதிய தேசிய கல்வி கொள்கையை இன்போசிஸ் நிறுவனர் என்.ஆர்.நாராயண மூர்த்தி பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது: இந்தியர்களின் மனதில் கண்டுபிடிப்புகள் மற்றும் புதுமைகளை புகுத்துவதில் ஆழ்ந்த கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.
அதை அடைய, ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வியை விரிவுபடுத்த வேண்டும். ஒவ்வொரு வளர்ந்த நாடும் குடிமக்களின் வாழ்க்கையை மேம்படுத்தவும், வேலையின்மை விகிதத்தை குறைக்கவும் இதையே பயன்படுத்துகின்றன.
புதுமையான யோசனைகளை உருவாக்க இளைஞர்களை ஊக்குவிப்பதன் மூலம் வேலைவாய்ப்பை அதிகரிக்க முடியும். இது வேலையின்மையைக் குறைக்கும். இந்த தேசிய கல்விக் கொள்கையை வடிவமைக்க முடிவு செய்ததற்காக பிரதமர் மோடி தலைமையிலான அரசை நான் பாராட்டுகிறேன்.
இது ஒரு சிறந்த யோசனை, சரியான திட்டம். ஆனால் நான் சுட்டிக்காட்டியது போல், இது மேல்நிலை கல்வியில் மட்டுமல்ல ஆரம்ப மற்றும் இடைநிலைப் பள்ளி மட்டத்திலும் செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
தேசிய கல்வி கொள்கையை சில மாநிலங்கள் ஏற்றுக்கொள்வதில் தயக்கம் காட்டுவது தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த நாராயண மூர்த்தி, ‛‛புதிய யோசனைகளை தொடருவதில் சிலருக்கு சந்தேகம் இருக்கலாம். அவர்களும் இந்தியாவுக்கான சிறந்த எண்ணம் கொண்டவர்கள் தான். அவர்களும் தேசப்பக்தர்கள் தான். அத்தகையவர்களிடம் தரவு மற்றும் உண்மைகளை வழங்கி தேசிய கல்வி கொள்கையின் மதிப்புகளை எடுத்து சொல்ல வேண்டும்” என்றார்.

