Last Updated:
சி.பி. ராதாகிருஷ்ணன் குடியரசுத் துணைத் தலைவராக தேர்வானதை அடுத்து, குஜராத் ஆளுநர் ஆச்சார்யா தேவ்ரத் மகாராஷ்டிரா கூடுதல் ஆளுநராக செயல்படுவார் என குடியரசு மாளிகை தெரிவித்துள்ளது.
இந்தியக் குடியரசுத் துணைத் தலைவராக இருந்துவந்த ஜகதீப் தன்கர் தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, அந்தப் பதவிக்குத் தேர்தல் நடைபெற்றது.
இதில், என்.டி.ஏ. கூட்டணி சார்பில் போட்டியிட்ட மகாராஷ்டிரா மாநில ஆளுநராக இருந்த சி.பி. ராதாகிருஷ்ணன், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட இந்தியா கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டியைவிட அதிக வாக்குகளைப் பெற்று, வெற்றி பெற்றார்.
இதனையடுத்து இந்தியாவின் குடியரசுத் துணைத் தலைவராக சி.பி. ராதாகிருஷ்ணன் தேர்வாகியுள்ளார். குடியரசு மற்றும் துணைக் குடியரசுத் தலைவர் பதவியைப் பொறுத்தவரை ஒருவர் அந்தப் பதவிக்குத் தேர்வான அடுத்த நொடியே அவரது முந்தையப் பதவியை அவர் ராஜினாமா செய்ததாகும்.
அதன்படி தற்போது குடியரசுத் துணைத் தலைவராக சி.பி. ராதாகிருஷ்ணன் தேர்வாகியதை அடுத்து, அவரது முந்தையப் பதவியான மகாராஷ்டிரா ஆளுநர் பதவி காலியானது.
இதனையடுத்து, குஜராத் மாநில ஆளுநர் ஆச்சார்யா தேவ்ரத்துக்கு மகாராஷ்டிர ஆளுநராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம், மகாராஷ்டிர ஆளுநர் பொறுப்பையும் கூடுதலாகக் கவனிப்பார் என குடியரசுத் தலைவர் மாளிகை அறிவித்துள்ளது.
September 11, 2025 5:13 PM IST

