Last Updated:
‘மிஸ் ரிஷிகேஷ்’ போட்டி ஒத்திகையில் மாடல்கள் அரைகுறை ஆடை அணிந்ததாக ராஷ்ட்ரிய இந்து சக்தி சங்கதன் உறுப்பினர்கள் தகராறு செய்தது உத்தராகண்டில் சர்ச்சை ஏற்படுத்தியது.
உத்தராகண்ட் மாநிலம் ரிஷிகேஷ் நகரில், லயன்ஸ் கிளப் சார்பில் அழகிப் போட்டி நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி, ‘மிஸ் ரிஷிகேஷ்’ போட்டியில் பங்கேற்க மாடல்கள் ஆயத்தமாகினர்.
இறுதிச் சுற்றுக்கு முன்பு ரேம் வாக் செல்வது தொடர்பாக, ஓர் அரங்கத்தில் ஒத்திகையில் ஈடுபட்டிருந்தனர். அத்துடன், விதவிதமான ஆடைகளுடன் ஒய்யார நடை போட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, திடீரென ஒரு கும்பல் அந்த அரங்கத்திற்குள் அத்துமீறி நுழைந்தது.
அவர்கள், தங்களை ராஷ்ட்ரிய இந்து சக்தி சங்கதன் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று அறிமுகம் செய்துள்ளனர். மேலும், தங்களை கலாசார காவலர்கள் என்ற ரீதியில் பேசிக்கொண்டு மாடல்களிடம் மல்லுக்கட்டினர்.
ஏன் இப்படி அரைகுறை ஆடைகளை அணிந்து கொண்டு, ரிஷிகேஷின் பாரம்பரியத்தையும் கலாசாரத்தையும் சீரழிக்கிறீர்கள் என்று கொந்தளித்தனர்.
அதற்கு, தங்களை கேள்வி கேட்க நீங்கள் யார்? என்று கேட்ட மாடல்கள், அழகிப் போட்டியில் இது போன்ற ஆடைகள் தான் அணிந்து கொள்வார்கள் எனவும் கூறினர். இந்த ஆடைகளை ரிஷிகேஷில் உள்ள கடைகளில் தான் வாங்கியதாக கூறிய மாடல்கள், கலாசாரம் சீரழிகிறது என்று நினைத்தால், அங்கு ஆடைகள் விற்கப்படுவதை தடுக்க முடியுமா என கிடுக்கிப்பிடி போட்டனர்.
அதையெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்த இந்து அமைப்பினர், தங்களைப் பொறுத்தவரை அழகிப் போட்டியில் அரைகுறை ஆடை அணியக் கூடாது என திட்டவட்டமாக கூறினர். நிலைமை எல்லை மீறுவதை உணர்ந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், இந்து அமைப்பினரை சமாதானம் செய்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பான வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய போதும், யாரும் புகார் அளிக்கவில்லை என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்த போதும், வீடியோவின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.
‘மிஸ் ரிஷிகேஷ்’ போட்டிக்கான ஒத்திகையில் மாடல்கள் அரைகுறை ஆடை அணிந்ததாக கூறி, இந்து அமைப்பினர் தகராறில் ஈடுபட்ட சம்பவம் உத்தராகண்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Uttarkashi,Uttarakhand (Uttaranchal)
October 05, 2025 9:24 PM IST

